’கியூட்’ தேர்வு: விண்ணப்ப படிவ விநியோகம்!
கியூட் நுழைவுத் தேர்விற்கான விண்ணப்ப செயல்முறை இன்று (பிப்ரவரி 10) முதல் தொடங்குகிறது.
மத்திய பல்கலைக்கழகங்களில் இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகளில் மாணவர் சேர்க்கைக்காக கியூட் நுழைவுத் தேர்வை மத்திய அரசு நடத்தி வருகிறது.
மத்திய பல்கலைக்கழகங்களில் 2023 ஆம் ஆண்டிற்கான இளங்கலை, முதுகலை படிப்புகளுக்கான மாணவர்கள் சேர்க்கைக்கான கியூட் பொதுத் தேர்வைத் தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
2023 கியூட் இளங்கலை தேர்வு 13 மொழிகளில் அதாவது தமிழ், ஆங்கிலம், ஹிந்தி, அஸ்ஸாமி, பெங்காலி, குஜராத்தி, கன்னடம், மலையாளம், மராத்தி, ஒடியா, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் உருது ஆகிய மொழிகளில் நடைபெற உள்ளது என்று யுஜிசி தலைவர் எம்.ஜெகதேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
இளங்கலைப் பட்டப்படிப்புகளுக்கான கியூட் தேர்வு விண்ணப்பப் படிவ விநியோகம் இன்று (பிப்ரவரி 10) முதல் இணைய வழியில் தொடங்க உள்ளது.
மத்திய பல்கலைக்கழகங்களில் சேர்வதற்கு கியூட் தேர்வு எழுத விரும்பும் தேர்வர்கள் https://cuet.samarth.ac.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பெற்றுக் கொள்ளலாம்.
விண்ணப்பங்களைச் சமர்ப்பிப்பதற்கான கடைசி தேதி மார்ச் 12 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே போல், மே மாதம் இரண்டாவது வாரத்தில் இருந்து மாணவர்கள் என்.டி.ஏ. இணையதளத்திலிருந்து ஹால் டிக்கெட்டுகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர் நுழைவுத் தேர்வு மே 21 முதல் 31 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது.
பல்கலைக்கழக மானியக் குழு கடந்த ஆண்டு மார்ச் மாதம் அனைத்து மத்தியப் பல்கலைக்கழகங்களிலும் இளங்கலை மாணவர் சேர்க்கை பொது நுழைவுத் தேர்வு மூலம் நடத்தப்படும் என்றும் அது 12ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்தப்படாது என்றும் தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
மோனிஷா
இடைத்தேர்தல்: இறுதி வேட்பாளர் பட்டியல் இன்று வெளியீடு!
துருக்கி நிலநடுக்கம்: 20 ஆயிரத்தை கடந்த பலி எண்ணிக்கையும் அச்சுறுத்தும் இயற்கையும்!