சுடுகாட்டுக்கு சாலை வசதி இல்லாததால் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் வாய்க்காலை கடந்து சுடுகாட்டுக்கு உடலை எடுத்துச் சென்ற காட்சி பார்ப்பவர்களை பதைபதைக்க வைத்துள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற தொகுதியில் வீரசோழபுர கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தின் ஓரமாக கொள்ளிடம் ஆற்றுத் தண்ணீர் அணைக்கரையில் இருந்து பாசனத்திற்கு செல்லக்கூடிய ராஜன்வாய்க்கால் உள்ளது.
வீரசோழபுரம் கிராம மக்கள் தங்களுடைய வயலுக்கு செல்வதாக இருந்தாலும், ஆடு மாடுகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்வதாக இருந்தாலும், ஊரில் யாரேனும் உயிரிழந்தால் உடலை சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்வதாக இருந்தாலும் இந்த ராஜன்வாய்க்காலை கடந்துதான் செல்ல வேண்டும்.
வீரசோழபுரத்தில் கணிசமாக பட்டியலின மற்றும் வன்னியர் சமூதாய மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். முக்குலத்தோர், முதலியார் சமூதாயத்தைச் சேர்ந்தவர்களும் வசித்து வருகின்றனர். மொத்தம் 2000 குடும்பங்கள் உள்ளன.
ராஜன்வாய்க்கால் சுமார் 30 மீட்டர் அகலம் கொண்டது. இந்த கால்வாயை கடக்க கட்டப்பட்ட இரண்டு நடைபாலமும் 10 ஆண்டுகளுக்கு முன்பே சேதமடைந்தன.
தற்போது தண்ணீர் அதிகமாக செல்வதால் மக்கள் இந்த வாய்க்காலை கடக்க சிரமப்பட்டு வருகின்றனர்.
இந்தநிலையில் வீரசோழபுரம் மேலத்தெருவைச் சேர்ந்த 85 வயதான கலியபெருமாள் வயது மூப்பு காரணமாக ஏற்பட்ட உடல்நலக் குறைவால் நேற்று (நவம்பர் 7) உயிரிழந்தார்.
அவரது உடலை மாலை 4 மணிக்கு ராஜன்வாய்க்காலில் ஓடக்கூடிய தண்ணீரில் இறங்கி சுடுகாட்டிற்கு எடுத்துச் சென்று அடக்கம் செய்தனர்.
அப்போது அந்த ஊர் இளைஞர்கள் அதை வீடிவோவாக எடுத்து 10 ஆண்டுகாலம் நடைபாலம் இல்லாமல் சிரமப்படுவதை சமூக வலைதளங்களில் பதிவு செய்தனர்.
சவ ஊர்வலத்தில் உடலுடன் ஊர் மக்கள் தண்ணீரில் நீந்திச் செல்லும் காட்சிகள் பார்ப்பவர்கள் மனதை ரணமாக்குகிறது.
இந்த சம்பவம் பற்றி காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வத்தை தொடர்புகொண்டு கேட்டோம்.
அவர், “வீரசோழபுரத்தில் சுடுகாட்டிற்கு செல்வதற்கு பட்டியலின மக்களுக்கு ஒரு நடைபாலமும், மற்ற சமூகத்தினருக்கு ஒரு நடைபாலமும் என இருபாதைகள் இருந்தன.
இரண்டும் 10 ஆண்டுகளுக்கு முன்பே சேதமடைந்துவிட்டது. நான் எம்.எல்.ஏ ஆன பிறகு ஆட்சியரிடம் முறையிட்டேன். அப்போது ஆட்சியர், இரண்டு பாலத்தையும் ஒரே நேரத்தில் இரு நடைபாலமும் கட்டமுடியாது. முதலில் ஒருபாலமும், பிறகு ஒருபாலமும் கட்டிவிடலாம் என்று கூறினார்.
அதுபோலவே கடந்த ஆண்டு பட்டியலின மக்கள் பயன்படுத்தக்கூடிய பாலம் கட்டி கொடுக்கப்பட்டது. தற்போது மேலத்தெரு பாலம் கட்ட நிதி ஒதுக்கப்பட்டு, வேலையை துவங்க உள்ளனர்.
தண்ணீர் குறைந்ததும் நடைபாலம் கட்டிமுடிக்கப்படும். மனம் இருந்திருந்தால் இன்னொரு பாதையை பயன்படுத்தியிருக்கலாம். ஆனால் அவர்களை எதோ தடுக்கிறது” என்று கூறினார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸப் சேனலில் இணையுங்கள்….
வணங்காமுடி
நல்லடக்கம் செய்யப்பட்ட வேகன் ஆர் கார்… பின்னணியில் சுவாரஸ்ய தகவல்!
மகாராஷ்டிரா தேர்தல் : பிரச்சாரத்தில் சாதி பெயர்களை பட்டியலிட்ட மோடி
அந்த ஊரு எம்மெல்லே இந்த விவகாரத்தப் பத்தி சொன்னத கவனிச்சீங்களா?
செத்தாலும் அந்த பக்கம் போகமாட்டேனு வைராக்கியமோ?