ஜூலை 9 ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் கடலூர் சிதம்பரம் சாலையில் அமைந்துள்ள தினத்தந்தி அலுவலக வளாகத்தில் குவிந்திருந்த குப்பைகளை சேர்த்து தீ வைத்த மர்ம நபரை கண்டுபிடித்து கைது செய்துள்ளது காவல்துறை.
கடலூரில் தினத்தந்தி ஆபீஸ் மற்றும் பிரிண்டிங் செய்யக்கூடிய பில்டிங் போர்டிகோ அருகில் இருந்த வேஸ்ட்களை எடுத்து தீ வைத்துவிட்டு தலைமறைவானார் அவர்.
இந்தத் தகவல் அறிந்ததும் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, டிஎஸ்பி பிரபு, எஸ்.பி. ராஜாராம் அனைவரும் ஸ்பாட்டுக்கு சென்று விசாரணை செய்தனர்.
அந்த இடத்தில் அந்த நேரத்தில் இயங்கியுள்ள செல்போன் இணைப்புகளை ஆராய்ந்தனர். மேலும் அந்த அலுவலக வாசல் மற்றும் சாலையில் உள்ள 15க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவாகியுள்ள காட்சிகளை பொறுமையாக பார்த்தனர்.
வெள்ளை நிறத்தில் ஒரு க்விட் கார் காலை 3 மணி அளவில் அப்பகுதியில் இயங்கியதை கண்டுபிடித்தனர். அதன் பிறகு பதிவு எண் வைத்து கார் உரிமையாளரை கண்டுபிடித்து, அந்த காரை யார் பயன்படுத்தியது என்று விசாரிக்க,
புதுப்பாளையம் தமிழக வாழ்வுரிமைக் கட்சியின் இளைஞர் அணி பொறுப்பில் இருந்த வாசு என்பவர் பயன்படுத்தினார் என்ற தகவல் தெரிந்தது.
இதையடுத்து புதுநகர் காவல் இன்ஸ்பெக்டர் குருமூர்த்தி, திருப்பாதிரிப்புலியூர் இன்ஸ்பெக்டர் கவிதா உள்ளிட்ட ஸ்பெஷல் டீம் போலீஸார் வாசுவை நெருங்கினார்கள்.
போலீஸ் தன்னை நெருங்குவதை அறிந்த வாசு, தனது கட்சி நிர்வாகிகளிடம் தஞ்சமானார். இதையடுத்து போலீசாரிடம் பேசிய தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிர்வாகிகள்,
“எங்கள் தலைவர் வேல்முருகனின் முன்னாள் மனைவி பேட்டியை பாலிமர் டிவியில் ஒளிபரப்பியிருக்கிறார்கள்.
அதைப் பார்த்துவிட்டு கோபமான அந்த வாசு கோபத்திலும் போதையிலும் தந்தி டிவி ஆபீசை பாலிமர் டிவி ஆபீஸ் என்று நினைத்துக் கொண்டு தவறு செய்துவிட்டதாக சொல்கிறான்.
நாங்களே அவனை கூட்டிட்டு வர்றோம். அவனை எச்சரித்து விட்டுவிடுங்களேன்” என்று கேட்டிருக்கிறார்கள்.
அதற்கு போலீசார், “இது மீடியா விவகாரம். முதல்ல அவனை கூட்டிட்டு வாங்க, மத்ததைப் பேசிக்கலாம்” என்று கூறியுள்ளனர்.
அதன்படியே இன்று ஜூலை 10 ஆம் தேதி காலை சுமார் 11.30 மணியளவில் திருப்பாதிரிபுலியூர் இன்ஸ்பெக்டர் கவிதாவிடம் வாசுவை ஒப்படைத்தனர். காவல்நிலையத்தில் வைத்து அந்த நபரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
–வணங்காமுடி
மிஷ்கினுக்கு படம் இயக்குவதற்கு இனி நேரமே கிடைக்காது: சிவகார்த்திகேயன்
“காவல்துறைக்கு முழு சுதந்திரம் வழங்க வேண்டும்” – எடப்பாடி வலியுறுத்தல்!