கடலூர் மாவட்டத்தில் கணவனை இழந்து குழந்தைகளுடன் தவித்த தாய்க்கு வீடு கட்டிக் கொடுத்து போலீசார் உதவியுள்ளனர்.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் நகரம் 26வது வார்டு மணலூர் நகரில் வசித்து வந்தவர் சக்திவேல். கட்டிட வேலை செய்து தனது குடும்பத்தை நடத்தி வந்தார்.
இவரது மனைவி முத்துலட்சுமி செங்கல் சூளையில் கூலி வேலை செய்து வருகிறார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள், மூன்று ஆண் பிள்ளைகள் உள்ளனர். இந்த 5 குழந்தைகளும் 5 வயது முதல் 16 வயதுக்கு உட்பட்டவர்கள்.
கடந்த மார்ச் மாதம்18 ஆம் தேதி காலையில் வழக்கம் போல் முத்துலட்சுமி வேலைக்கு சென்றுவிட்டார், சக்திவேல் திட்டக்குடி அருகில் டைல்ஸ் ஒட்டும் வேலைக்கு சென்றார்.
அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு வீட்டுக்கு வந்த முத்துலட்சுமி பிள்ளைகளுக்கு சாப்பாடு கொடுக்க விறகு அடுப்பில் சமைக்க தொடங்கினார். 7 மணி கடந்தும் கணவர் சக்திவேல் வீட்டுக்கு வரவில்லை என்பதால் கோபத்தில் இருந்தார்.
பின்னர் தான் பென்னாடம் அருகே வந்துகொண்டிருந்த போது சாலை விபத்தில் கணவர் உயிரிழந்துவிட்டார் என்ற தகவல் முத்துலட்சுமிக்கு கிடைத்தது. இந்த தகவலால் முத்துலட்சுமியும் அவரது குழந்தைகளும் கதறி அழுதனர்.
சக்திவேலின் உடல் மார்ச் 19ஆம் தேதி பிரேதப் பரிசோதனைக்கு பின் மணலூரில் உள்ள அவர்களது குடிசை வீட்டுக்கு எடுத்து வரப்பட்டது. அப்போது பென்னாடம் போலீசார் மற்றும் விருத்தாசலம் டிஎஸ்பி ஆரோக்கியராஜ் ஆகியோரும் வந்தனர்.
சக்திவேலின் வீட்டின் குடிசை மேல் டிஜிட்டல் பேனர் வேயப்பட்டிருந்தது. அந்த குடிசையின் சுற்று பகுதியும் டிஜிட்டல் பேனர் மற்றும் சன்னல் சாக்கால் அடைக்கப்பட்டிருந்தது.
இந்த காட்சியை பார்த்து நின்றுகொண்டிருந்த போலீசாரிடம், “மழையில் ஒழுகும் குடிசை வீட்டில் சின்னஞ்சிறு ஐந்து பிள்ளைகளை வைத்துக்கொண்டு எப்படி வாழப்போகிறேன்” என்ற கதறியுள்ளார் முத்துலட்சுமி.
உடனே டிஎஸ்பி ஆரோக்கியராஜ் அங்கிருந்தபடி எஸ்.பி ராஜராமை தொடர்புக்கொண்டார். சக்திவேலுக்கு ஏற்பட்ட விபத்து, அவரது குடும்ப சூழல், பாதுகாப்பு இல்லாத வீடு இதையெல்லாம் எஸ்.பி.யிடம் கூறினார்.
இதை கேட்டுக்கொண்ட எஸ்.பி. விபத்து ஏற்படுத்திய வாகனம் தெரிந்ததா, கண்டுபிடிக்கப்பட்டதா என்று கேட்க, ”பென்னாடம் போலீசார் அனைத்து சிசிடிவி கேமராக்களையும் ஆராய்ந்து பார்த்தனர். க்ளு கிடைக்கவில்லை, ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் விபத்து நடந்ததால் நேரிலும் யாரும் பார்க்கவில்லை” என்றார் டிஎஸ்பி ஆரோக்கியராஜ்,
இதையடுத்து எஸ்.பி.ராஜாராம், “இன்சூரன்ஸும் கிடைக்காது. அந்த குடும்பத்திற்கு நாம் உதவி செய்தாக வேண்டும். முதலில் பிள்ளைகளை படிக்கவைக்க ஏற்பாடு செய்வோம் என்று கூறினார்.
தொடர்ந்து சக்திவேலின் உடலை அடக்கம் செய்யும் இறுதிச் சடங்குகள் எல்லாம் முடிந்த பின்னர், அவரது பெண் பிள்ளைகளான சந்தியா, செவ்வந்தி இருவரையும் படிக்க தங்கும் வசதிகளுடன் கூடிய பள்ளியில் சேர்த்து விட்டனர், மூன்று ஆண் பிள்ளைகளை திண்டிவனம் செயின்டனஸ் பள்ளியில் சேர்த்து விடுதியிலும் சேர்த்து விட்டனர்.
அடுத்தபடியாக அவர்களுக்கு ஒரு நல்ல வீடு கட்டிக் கொடுக்க முடிவெடுத்து, விருத்தாசலம் டிஎஸ்பி உட்கோட்டத்தில் உள்ள போலீசார்கள் கல், மணல், ஜல்லி, சிமெண்ட், கம்பி, என பொருள் உதவிகள் செய்தனர்.
இதையறிந்த சக போலீசாரும் உதவிக்கரம் நீட்ட, சுமார் 10 லட்சம் மதிப்பில் நல்ல அழகான வீடு கட்டப்பட்டது. கடந்த அக்டோபர் 25 ஆம் தேதி, அனைத்து விதமான சீர்வரிசைகளையும் போலீசார் எடுத்துக் கொடுத்து கிரஹப்பிரவேசம் நடத்தி வைத்தனர்.
எஸ்.ஐ.கள், இன்ஸ்பெக்டர்கள், டிஎஸ்பி ஆரோக்கியராஜ் ஆகியோர் முன்னிலையில் எஸ்.பி ராஜாராம் வீட்டு சாவியை கொடுத்தபோது, முத்துலட்சுமி மற்றும் ஐந்து பிள்ளைகளும் ஆனந்த கண்ணீருடன் போலீசாருக்கு நன்றி தெரிவித்தனர்.
“எங்களுக்கு யாரும் இல்லை எங்கள் வாழ்க்கையே முடிந்துவிட்டது என நினைத்தோம், ஆனால் எங்களுக்கு துணையாக காவல் துறை நீங்கள் இருக்கிறீர்கள்” என்று நன்றி சொன்னார்கள், இதைப் பார்த்த ஊர் மக்கள் காவல்துறையினரை பாராட்டி மேலதாளத்துடன் மரியாதை கொடுத்தனர்.
இதைப்பற்றி எஸ்.பி.ராஜாராமை நாம் தொடர்புகொண்டு கேட்டோம்,
“எல்லாவற்றுக்கும் அரசாங்கத்தை எதிர்பார்க்க முடியாது
உதவும் எண்ணம் அனைவருக்கும் வரவேண்டும். அப்படி அனைவரும் உதவ முன் வந்தால் நாடு நலமாக இருக்கும், முதலில் உங்கள் வீதியில், ஊரில், பிறகு மாவட்டத்தில் என படிப்படியாக உதவ முன் வாருங்கள் வறுமையை ஒழிப்போம்” என்று அழைப்பு விடுத்தார்.
காவல்துறையினர் மக்களுக்கானவர்கள் என்ற நம்பிக்கையை ஏற்படுத்திய கடலூர் போலீசாருக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
-வணங்காமுடி
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…