கொலை: இரண்டே நாட்களில் குற்றப் பத்திரிக்கை தாக்கல் செய்த போலீஸ்!

தமிழகம்

கொலை வழக்கு ஒன்றில் இரண்டு நாட்களுக்குள் போலீசார் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது அத்துறைக்குள் முக்கியமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகில் முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையம் எல்லைக்குட்பட்ட பகுதியில் கீழக்குப்பம் கிராமம் உள்ளது.

இங்குள்ள ஏரிக்கரை ஓரத்தில் வீடுகட்டி குடும்பத்துடன் வசித்து வருகிறார் பயில்வான் என்கிற சக்திவேல். சுற்று வட்டார கிராமங்களில் உள்ள தென்னை மற்றும் பனை மரங்களில் செர எடுக்கும் தொழில் செய்து வருகிறார். இந்த தொழில் மூலம் வரும் வருமானத்தை வைத்து மனைவி, மூன்று பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்தார்.

சக்திவேலை பயில்வான் என்று சொன்னாலும், மனது குழந்தை மாதிரி என்கிறார்கள் கீழக்குப்பம் பகுதி மக்கள். கீழக்குப்பம் கிராமத்தின் செல்லப்பிள்ளையாக வலம் வந்துள்ளார்.

கடந்த மே 17ஆம் தேதி மாலை 6.30 மணியளவில் கீழக்குப்பம் அய்யனார் கோயில் ஏரியில் குளித்துக்கொண்டிருந்தார் சக்திவேல். அப்போது வெளியூரைச் சேர்ந்த ஒருவர் அதே ஏரியில் குளிக்க வந்திருக்கிறார். அந்த சமயத்தில் ஏரிக்கரையோரம் இருக்கும் கோயில் படிக்கட்டில் அமர்ந்து மது குடிக்க வந்தனர் அதே ஊர்க்காரர்களான ஞானகுரு, ராஜசேகர் ஆகிய இருவர். அவர்கள் அந்த வெளியூர் நபரை பார்த்து, “யாருடா நீ எங்க ஊர் ஏரியில குளிக்கிற?” என்று கேட்டிருக்கின்றனர்.

அதற்கு சக்திவேல் பதிலளித்திருக்கிறார். “அவர் நம்ம ஊரு ரேசன் கடைக்கு கட்டிட வேலைக்கு வந்திருக்காரு. அங்க வேலைய முடிச்சிட்டு இங்க வந்து கை கால் கழுவுறார்” என்று சக்திவேல் சொல்ல,

‘நீ யாருடா எதிர்க் குரல் கொடுக்கிறது’ என ஞானகுருவும் ராஜசேகரும் கேட்க இரு தரப்புக்கும் இடையே வார்த்தைப்போர் முற்றியது.

உடனே ஞானகுருவும் ராஜசேகரும் அங்கிருந்த முந்திரி கட்டையால் சக்திவேலைக் கடுமையாக தாக்கினர். வலி தாங்க முடியாமல் சக்திவேல் அலற… சத்தம் கேட்டு மனைவி மலர்கொடி ஓடிவந்துள்ளார்.

கணவனை காப்பாற்ற முயன்ற போது இருவரும், ‘உன்னையும் கொலை செய்து விடுவோம்’ என மிரட்டியுள்ளனர்.

இந்நிலையில் ஏரிக்கரையில் சக்திவேல் தாக்கப்பட்டு உயிருக்கு போராடுகிறார் என்ற தகவல் ஊர் முழுவதும் பரவியதும். சம்பவ இடத்துக்கு வந்த ஊர்மக்கள் சக்திவேலை காப்பாற்ற பண்ருட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்துவிட்டார்.

இந்த சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பண்ருட்டி உட்கோட்டம் டிஎஸ்பி சபியுல்லா, போலீசாருடன் சென்று சக்திவேல் வீட்டையும், கொலை செய்தவர்கள் வீட்டையும் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தார்.

சக்திவேல் கொலை செய்யப்பட்டார் என்ற கோபத்தில் பழிக்குப் பழி போன்ற அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்று போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

இதையடுத்து எஸ்.பி ராஜாராமும் இச்சம்பவம் குறித்து டிஎஸ்பி சபியுல்லாவுடன் தொலைபேசியில் ஆலோசனை செய்ததுடன் சம்பவ இடத்துக்கும் சென்று விசாரணை மேற்கொண்டார்.

காடம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைபாண்டியன், முத்தாண்டிக்குப்பம் சப் இன்ஸ்பெக்டர் ரவிசந்திரன் ஆகியோருக்கு விசாரணை தொடர்பாக முக்கிய பொறுப்புகளை வழங்கினார்.

தொடர்ந்து சக்திவேலின் உடலை பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். பின்னர், இரவு நேரமாகிவிட்டதால் சம்பவம் நடந்த அய்யனார் கோயில் பகுதிக்கு சென்ற போலீசார், தடயங்கள் அழிக்கப்படாமல் இருக்க அங்கும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

சம்பவம் நடந்த மே 17ஆம் தேதி இரவு 11.30 மணிக்கு சக்திவேல் மனைவி மலர்கொடியிடம் புகார் பெற்ற முத்தாண்டிக்குப்பம் போலீசார், பிரேதப் பரிசோதனை செய்வதற்கான நடவடிக்கை மேற்கொண்டனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் பயன்படுத்திய இருசக்கர வாகனம், செருப்பு, செல்போன், போன்ற தடயங்களை மே 18ஆம் தேதி, காலை 5.30 மணிக்குச் சம்பவ இடத்திற்குச் சென்று கைப்பற்றி விசாரணையைத் தொடங்கினர்.

இதையடுத்து கொலை செய்த ஞானகுரு, ராஜசேகர் இருவரும் மானடிக்குப்பம் கோயில் அருகில் இருப்பதை உறுதி செய்த போலீசார் மே 18 மதியம் 2 மணியளவில் அங்கு சென்று கைது செய்தனர். அவர்களிடம் வாக்குமூலமும் பெற்றனர்.

இருவர் மீதும் ஏற்கனவே கொலை முயற்சி வழக்குகள், பொதுச் சொத்துகளை சேதப்படுத்திய வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இந்நிலையில், மே 18ஆம் தேதி மாலை 4 மணியளவில் கீழக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த 200 பேர், கொல்லப்பட்ட சக்திவேல் குடும்பத்தினருக்கு நியாயம் கேட்டு சாலை மறியில் ஈடுபட முயன்றனர். அவர்கள் பேருந்துகளிலும், இரு சக்கர வாகனத்திலும் சென்னை கும்பகோணம் ரோடு நோக்கி புறப்பட்டனர்.

cuddalore murder case

இதையறிந்த டிஎஸ்பி சபியுல்லா, ஊர் மக்கள் வந்த வாகனங்களை மறித்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டார்.

ஊர் மக்களிடம், “கொலை வழக்குப் பதிவுசெய்தாச்சு, குற்றவாளிகளை கைது செய்தாச்சு, சட்டப்படி நீதிமன்றத்தில் தண்டனையும் பெற்றுத்தருவோம், இதற்கு மேல் என்ன செய்யவேண்டும்” என்று டிஎஸ்பி கேட்க,

“கொலை செய்தவர்களிடம் அதிகமாக நிலம் உள்ளது. அதனால் அவர்கள் நிலத்திலிருந்து இரண்டு ஏக்கர் நிலத்தை கொல்லப்பட்ட சக்திவேலின் மனைவிக்கு எழுதி வைக்கச் சொல்லுங்கள்” என்றனர் ஊர்மக்கள்.

”வன்முறைக்கு வன்முறை தீர்வு இல்லை. நீங்கள் சொல்வதுபோல் ஐந்து கொலை செய்துவிட்டு பத்து ஏக்கர் நிலம் எழுதிவைத்துவிட்டால் விட்டுவிடுவீங்களா? எனக் கேட்ட டிஎஸ்பி சபியுல்லா,

“சக்திவேல் குடும்பத்திற்காக இவ்வளவு பேர் வந்திருக்கிறீர்கள். அவர்கள் குடும்பத்திற்கு நல்லது செய்ய வேண்டுமென்று நினைத்தால், உங்களால் முடிந்தளவுக்குச் சிறுசிறு உதவிகள் செய்யுங்கள். சிறுதுளி பெரும் வெள்ளமாகும். இதோ இப்போது நான் 10,000 ரூபாய் கொடுக்கிறேன். நீங்களும் கொடுங்கள்” என்று சொன்னதும், மறியல் செய்ய வந்தவர்களில் பாதிப்பேர் கலைந்துவிட்டனர்.

அதன் பிறகு இறந்துபோன சக்திவேல் மகன்களை அழைத்து, “யார் யார் என்னென்ன படிக்கிறீர்கள். ஊர் மக்கள் சொன்னதுபோல் உங்களுக்கு இரண்டு ஏக்கர் நிலம் வேண்டுமா, அல்லது உங்கள் அப்பா கொலைக்கு நீதி வேண்டுமா?” என கேட்டுள்ளார் டிஎஸ்பி.

இதற்கு, “நிலம் வேண்டாம் நீதி வேண்டும், குற்றம் செய்தவர்கள் நீதிமன்றத்தால் தண்டிக்கப்படவேண்டும்” என்று சக்திவேலின் மகன்கள் தெரிவித்துள்ளனர்.

cuddalore murder case
டிஎஸ்பி சபியுல்லா

அங்கிருந்தபடியே எஸ்பி ராஜாராமை தொடர்பு கொண்ட டிஎஸ்பி போனை ஸ்பீக்கரில் போட்டு, “சார், இறந்துபோன சக்திவேலின் மூத்த மகன் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளார்” என்று சொல்ல, “அவரை நாமே ஒரு நல்ல அரசு கல்லூரியில் சேர்த்துவிடுவோம். அந்த கல்லூரி செலவை நான் ஏற்கிறேன்” என எஸ்பி ராஜாராம் கூறியுள்ளார். இதை கேட்ட ஊர் மக்களின் கோபம் குறைந்தது.

தொடர்ந்து போலீசார் விசாரணையை முடுக்கிவிட்டனர். காடம்புலியூர் இன்ஸ்பெக்டர் ராஜதாமரைப்பாண்டியன், பண்ருட்டி இன்ஸ்பெக்டர் கண்ணன், புதுப்பேட்டை இன்ஸ்பெக்டர் நந்தகுமார், நெல்லிக்குப்பம் இன்ஸ்பெக்டர் சீனிவாசன், அனைத்துமகளிர் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் வள்ளி ஆகிய ஐந்து இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் 5 தனிப்படைகளை அமைத்த டிஎஸ்பி, ஒவ்வொருவருக்கும் ஒரு பணியை வழங்கினார்.

cuddalore murder case
ஞானகுரு

பிரேதப் பரிசோதனை அறிக்கை வாங்குவதற்கு ஒரு டீம், குற்றச் செயலில் ஈடுபட்டவர்கள் பயன்படுத்திய கட்டையில் பதிந்துள்ளது மனித ரத்தமா அல்லது மிருக ரத்தமா என மருத்துவ அறிக்கை வாங்க ஒரு டீம், சக்திவேல் வயிற்றில் உள்ள உறுப்புகளில் எடுக்கப்பட்ட ரசாயன டெஸ்ட் ரிப்போர்ட் வாங்க ஒரு டீம், லீகல் ஒப்பினியன் வாங்க ஒரு டீம் என 5 டீம்களை அமைத்து விசாரணையை வேகப்படுத்தினார்.

cuddalore murder case
ராஜசேகர்

இதன்காரணமாக அனைத்து அறிக்கைகளையும் தடயங்களையும் சேகரித்து, 21 பேரிடம் சாட்சிகள் பெற்று 90 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகையை சம்பவம் நடந்த 46 மணி நேரத்தில், மே 19ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு பண்ருட்டி ஜே.எம். நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர் போலீஸார்.

மே 17ஆம் தேதி மாலை 6.30 மணிக்குச் சம்பவம் நடைபெற்றது, இரவு 11.30 மணிக்குப் புகார் பெறப்பட்டு, நள்ளிரவு 12.00 மணியளவில் எஃப்ஐஆர் பதியப்பட்டு (குற்ற எண்132/2023), மே 18 காலை 5.30 மணிக்கு விசாரணையைத் துவங்கிய போலீசார் 19ஆம் தேதி மாலை 4.30 மணிக்குக் குற்றப்பத்திரிகைத் தாக்கல் செய்துள்ளனர்.

பெரும்பாலான வழக்குகளில் குற்றப்பத்திரிகைகள் வருடக் கணக்கில் தாக்கல் செய்யப்படாமல் இருக்கும் நிலையில் இரு நாட்களில் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்த அதிகாரிகளுக்கு டிஜிபி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் கடலூர் மாவட்டம் வந்த காவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு, எஸ்பி ராஜராமை பாராட்டி, டிஎஸ்பி சபியுல்லாவுக்கு ரிவார்டும் கொடுத்துள்ளார். இதே வேகத்தை எல்லா வழக்குகளிலும் போலீஸார் காட்ட வேண்டும் என்பதுதான் மக்களின் வேண்டுகோளாக இருக்கிறது.

-வணங்காமுடி

சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் விபத்து: கடும் போக்குவரத்து நெரிசல்!

எட்டாம் நாள் ரெய்டு: கரூர் வழக்கறிஞர் அலுவலகத்தில் ஆவணங்கள் பறிமுதல்!

+1
1
+1
1
+1
0
+1
8
+1
0
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *