கடலூர்: பெண் காவலருக்கு லவ் டார்ச்சர்… பாஜக பிரமுகர் கைது!

Published On:

| By Selvam

திருமணமான பெண் காவலருக்கு தொடர்ந்து லவ் டார்ச்சர் கொடுத்து வந்த கடலூர் மாவட்ட பாஜக பிரமுகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கடலூர் மாவட்ட பாஜகவின் ஓபிசி செயலாளராக இருப்பவர் விஜயகுமார். இவர் விருத்தாசலத்தை அடுத்த கொக்கன்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் திருநீலக்குடி காவல்நிலையத்தில் பணி செய்து வரும் பெண் காவலருக்கு விஜயகுமார் தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். “எனக்கு திருமணமாகவில்லை. நான் உன்னை நன்றாக பார்த்துக்கொள்வேன். பாஜக மாவட்ட செயலாளராக இருக்கிறேன். எனக்கு நல்ல வருமானம்” என்று மெசேஜ் அனுப்பியிருக்கிறார்.

பதிலுக்கு அந்த பெண் காவலர், “எனக்கு திருமணம் ஆகி குழந்தை இருக்கிறது” என்று மெசேஜ் அனுப்பியுள்ளார்.

“பராவாயில்லை. நான் உன்னை நன்றாக பார்த்துக்கொள்வேன்” என ஆசைவார்த்தை கூறியுள்ளார் விஜயகுமார்.

தொடர்ந்து மெசேஜ் அனுப்பி வந்ததால், ஒருகட்டத்தில் கோபமடைந்த பெண் காவலர் ” உன்ன செருப்பால அடிப்பேன்” என கடுமையாக திட்டி மெசேஜ் செய்துள்ளார்.

அதற்கு, “உனக்கு வேற புது செருப்பு வாங்கி தருகிறேன்” என நக்கலாக மெசேஜ் அனுப்பியுள்ளார் விஜயகுமார்.

விஜயகுமார் டார்ச்சர் தாங்க முடியாமல், காட்டுமன்னார் கோவில் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் ஆறுமுகத்திடம் பெண் காவலர் புகார் அளித்துள்ளார்.

இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், உதவி ஆய்வாளர் மணிகண்டனை இந்த வழக்கு தொடர்பாக விசாரிக்க உத்தரவிடுகிறார்.

எஸ்ஐ மணிகண்டன் பாஜக பிரமுகர் விஜயகுமாருக்கு சம்மன் அனுப்பி விசாரணைக்கு அழைத்துள்ளார். ஆனால், விஜயகுமார் விசாரணைக்கு வர மறுத்துள்ளார்.

இதனையடுத்து மேல் அதிகாரியிடம் ஆலோசனை செய்துவிட்டு நேற்று (டிசம்பர் 7) காலை 8 மணிக்கு போலீசார் விஜயகுமார் வீட்டிற்கு சென்றுள்ளனர்.

தொடர்ந்து விசாரணைக்காக அவரை காட்டுமன்னார் கோவில் காவல்நிலையத்திற்கு அழைத்து சென்றனர்.

இந்த வழக்கு குறித்து காவல்துறை வட்டாரத்தில் நாம் விசாரித்தபோது…

“விஜயகுமாருக்கு வயது 40. இன்னும் திருமணமாகவில்லை. ஜேசிபி இயந்திரங்கள் வைத்துக்கொண்டு காண்ட்ராக்ட் வேலை செய்து வருகிறார்.

பெண் காவலரின் சொந்த ஊர் காட்டுமன்னார்கோவில். கடலூர் குண்டு உப்பளவாடியைச் சேர்ந்த போலீஸ் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். தற்போது தஞ்சாவூர் மாவட்டம் திருநீலக்குடி காவல்நிலையத்தில் பெண் காவலராக பணியாற்றி வருகிறார். அவருக்கு குழந்தை பிறந்து ஒரு வருடம் ஆகிறது.

தற்போது காட்டுமன்னார் கோவிலில் உள்ள தனது அம்மா வீட்டில் பேறுகால விடுப்பில் இருந்து வருகிறார். இவருக்கு விஜயகுமார் தொடர்ந்து ஆபாசமாக மெசேஜ் அனுப்பி வந்துள்ளார். மேலும், தான் பாஜக மாவட்ட செயலாளர் என்று அவரை மிரட்டி வந்துள்ளார்” என்றவர்களிடம் நாம் குறுக்கிட்டு விஜயகுமாருக்கு பெண் காவலர் நம்பர் எப்படி கிடைத்தது என்று கேட்டபோது, “திருநீலக்குடி பகுதியில் விஜயகுமார் ஜேசிபி வாங்கியிருக்கிறார். அப்போது அங்கு ஏற்பட்ட பிரச்சனையால் காவல்நிலையத்திற்கு சென்றிருக்கிறார்.

காவல்நிலையத்தில் பெண் காவலரிடம் பேசியபோது அவரும் கடலூரைச் சேர்ந்தவர் என்பது விஜயகுமாருக்கு தெரியவந்தது. இதனை தொடர்ந்து பெண் காவலரிடம் நம்பர் கேட்டிருகிறார் விஜயகுமார். ஆனால் அவர் கொடுக்கவில்லை. இதனையடுத்து அங்கிருந்த ஆண் காவலர் ஒருவரிடம் நம்பர் வாங்கியிருக்கிறார்.

தினமும் குட் மார்னிங், குட் நைட் மெசேஜ் அனுப்பி வந்தவர் ஒருகட்டத்தில் ஆபாச மெசேஜ்கள் அனுப்ப ஆரம்பித்துள்ளார்.

பெண் காவலர் அளித்த புகாரை தொடர்ந்து, விஜயகுமாரை நேற்று காலை போலீசார் கைது செய்தனர். நெய்வேலி மாஜிஸ்திரேட்டு முன்பாக அவரை ஆஜர்படுத்தினர். அப்போது விஜயகுமாரை ரிமாண்ட் செய்யக்கூடாது என்று அவரது தரப்பு வழக்கறிஞர்கள் மாஜிஸ்திரேட்டிடம் வாதம் வைத்தனர்.

போலீஸ் தரப்பில், பெண் காவலருக்கு அனுப்பிய ஆபாச மெசேஜ், வழக்கை வாபஸ் வாங்க வேண்டும் என மிரட்டியது தொடர்பான வாதத்தை முன்வைத்தனர். இதனையடுத்து 14 நாட்கள் விஜயகுமாரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்றத்தில் இருந்து கிளம்ப இரவு 10 மணிக்கு மேல் ஆகியதால், கடலூர் மத்திய சிறைக்கு செல்லும் வழியில் ‘சார்…ரொம்ப பசிக்குது. இரண்டு பரோட்டா, சிக்கன் குருமா, ஒரு ஆம்லேட்’ வேண்டும் என்று விஜயகுமார் கேட்டிருக்கிறார். வழக்கறிஞர் சாப்பாடு வாங்கி கொடுத்துள்ளார். இதனையடுத்து விஜயகுமாரை போலீசார் நள்ளிரவில் சிறைக்குள் அனுப்பி வைத்துள்ளனர்.

வணங்காமுடி

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

ரஜினி பட வசூலும் ரூ.100 கோடி சம்பளமும்!

ஆப்பிள் நிறுவன ஊழியர்களுக்கு ஆபத்து!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.