ஒடிசாவில் மையம் கொண்டிருக்கும் புயல் சின்னம் காரணமாக தமிழகம் மற்றும் புதுவை பகுதிகளில் இன்று (ஆகஸ்ட் 9) ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தெற்கு ஒடிசா, வடக்கு ஆந்திரா கடலோரம் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, இன்று (ஆகஸ்ட் 9) காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்து ஒடிசா மாநிலம் புவனேஸ்வருக்கு அருகே சுமார் 70 கி.மீட்டர் தொலைவில் உள்ளது.
இந்தப் புயல் சின்னம் மேற்கு, வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து சட்டீஸ்கர் அருகே நாளை (ஆகஸ்ட் 10) வலுவிழக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
புயல் எச்சரிக்கை காரணமாக நாகப்பட்டினம் துறைமுகத்தில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
இதேபோல் சென்னை எண்ணூர், காரைக்கால், புதுச்சேரி, கடலூர், தூத்துக்குடி, ராமேஸ்வரம் பாம்பன் ஆகிய துறைமுகங்களிலும் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தற்போதைய நிலவரப்படி, ஒரு புயல் உருவாவதற்கான சாத்தியக் கூறு இருப்பதன் காரணமாக எச்சரிக்கைக் கூண்டு ஏற்றப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
ஜெ.பிரகாஷ்