தமிழில் சி.ஆர்.பி.எப் தேர்வு: மத்திய அரசு மறுப்பு?

Published On:

| By christopher

சி.ஆர்.பி.எப். தேர்வு தமிழில் நடத்தப்படாது என்று மத்திய உள்துறை அமைச்சகம் இன்று (ஏப்ரல் 12) தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சி.ஆர்.பி.எப். என்பது இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் மத்திய காவல் ஆயுதப்படைகளிலேயே பெரிய படையாகும். மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் ஏற்படும் கலவரங்களை கட்டுப்படுத்தும் பணியில் இந்தப் படை ஈடுபடுத்தப்படுகிறது.

crpf exam conducted only in hindi and english internal ministry

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பில், ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே சி.ஆர்.பி.எப். தேர்வு நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்தி அல்லாத பிராந்திய மொழிகளிலும் இத்தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், கர்நாடக முன்னாள் முதல்வர்கள் சித்தாராமையா, குமாரசாமி உட்பட இந்தி பேசாத மற்ற மாநில முதல்வர்களும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் வலியுறுத்தினர்.

முதல்வர் மு.க.ஸ்டாலின், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு எழுதிய கடித்தத்தில், “சிஆர்பிஎப் ஆட்சேர்க்கைக்கான தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தியில் மட்டுமே நடத்தப்படும் என்ற அறிவிப்பு அதிர்ச்சி அளிக்கிறது.

மொத்தமுள்ள 9,212 இடங்களில் 579 பணியிடங்கள் தமிழ்நாட்டில் நிரப்பப்பட உள்ளன. இருப்பினும் தேர்வில் மொத்தம் உள்ள 100 மதிப்பெண்களில் 25 மதிப்பெண்கள் இந்தி மொழி அடிப்படை புரிதலுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது கண்டனத்துக்குரியது.

இது துணை ராணுவ படையில் பணியாற்ற விரும்பும் தமிழ்நாட்டு இளைஞர்கள் வாய்ப்பை பறிக்கும் வகையில் இந்த அறிவிக்கை அமைந்துள்ளது.

எனவே சி.ஆர்.பி.எப். ஆட்சேர்க்கைக்கான கணினி தேர்வை தமிழ் உள்பட பிற மாநில மொழிகளிலும் நடத்த வேண்டும்.” இவ்வாறு கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.

இந்நிலையில் சி.ஆர்.பி.எப். ஆட்சேர்க்கைக்கான கணினி தேர்வு தமிழ் உள்ளிட்ட பிறமொழிகளில் நடத்தப்படாது என்று தெரியவந்துள்ளது

பிரபல தனியார் தொலைக்காட்சிக்கு உள்துறை அமைச்சகம் இன்று அளித்துள்ள பேட்டியில்,

“ஆண்டாண்டு காலமாக சி.ஆர்.பி.எப் தேர்வு ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் மட்டுமே நடத்தப்பட்டு வருகிறது. இந்தாண்டும் அந்த நடைமுறையே பின்பற்றப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு நடத்தும் நீட் உள்ளிட்ட தேர்வுகள் பிறமொழிகளில் தேர்வு நடத்த அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சி.ஆர்.பி.எப் தேர்வினை தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் நடத்த மத்திய உள்துறை அமைச்சகம் மறுப்பு தெரிவித்துள்ளது தேர்வாளர்கள் மற்றும் தலைவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிறிஸ்டோபர் ஜெமா

போலி வீடியோ: மணிஷ் காஷ்யப் மேலும் ஒரு வழக்கில் கைது!

துப்புரவு பணியாளர் டூ கிரிக்கெட் வீரர்: யார் இந்த ரிங்கு சிங்?