ஆற்றில் குளித்த இளைஞன் – இழுத்து சென்ற முதலை
கொள்ளிடம் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த இளைஞரை முதலை கடித்து இழுத்துச் சென்றதால் பலி ஆகியுள்ளார்.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள வடக்கு வேளக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் பக்கிரி. இவரது மகன் திருமலை (18). திருமலையும் அவரது நண்பர்களும் வீட்டிற்குப் பின்புறம் உள்ள பழைய கொள்ளிடம் ஆற்றில் நேற்று (நவம்பர் 26) மாலை 3.30 மணியளவில் குளிக்கச் சென்றுள்ளனர்.
ஆற்றில் குளித்துக் கொண்டிருக்கும் போது ராட்சத முதலை ஒன்று திடீரென திருமலையை கடித்து தண்ணீருக்குள் இழுத்துச் சென்றுள்ளது.
இதனைக் கண்டு அதிர்ச்சியடைந்த திருமலையின் நண்பர்கள் மற்றும் ஆற்றின் அருகில் இருந்தவர்கள் முதலையை விரட்டியுள்ளனர்.
மேலும், இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் மற்றும் சிதம்பரம் வனத்துறையினர் பழைய கொள்ளிடம் ஆற்றில் முதலை கடித்து இழுத்துச் சென்ற திருமலையை படகில் சென்று தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இரவு 7 மணியளவில் திருமலையை தீயணைப்புத்துறையினர் சடலமாக மீட்டுள்ளனர்.
வேளக்குடி கொள்ளிடம் ஆற்றில் முதலைகள் அதிக அளவில் இருப்பதாகவும் இதனால் அந்த பகுதியில் முதலை பண்ணை அமைக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த முதலைகள் ஆற்றில் தண்ணீர் குடிக்க இறங்கும் ஆடு மாடுகளை கடித்துக் கொன்றுவிடுவதோடு மனிதர்களையும் கடித்து இழுத்துச் சென்று விடுகின்றன.
ஆற்றில் குளித்த இளைஞர் முதலை கடித்து பலியான சம்பவம் சிதம்பரம் பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மோனிஷா
குஜராத் தேர்தல் அறிக்கை : இலவசத்தை அள்ளி வீசிய பாஜக!
“பொன்ராமின் கதை என்னை ஈர்த்தது”: விஜய் சேதுபதி