கிச்சன் கீர்த்தனா : கிரிஸ்பி இறால் வறுவல்
எடை குறைக்க விரும்புபவர்கள் இறாலை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். எடை குறைப்பதில் மட்டுமல்ல… சருமப் பொலிவுக்கும் இறால் உதவுகிறது. இறாலிலுள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் பலவிதங்களிலும் நலம் பயப்பவை.
இவை மட்டுமல்ல… பார்வைச் சிதைவைத் தடுப்பதிலும், மூப்புத் தோற்றத்தைத் தள்ளிப்போடுவதிலும், எலும்பு ஆரோக்கியத்திலும்கூட இறால்கள் பெரிதும் பங்காற்றுகின்றன. நலங்களை அள்ளித்தரும் இறாலைக்கொண்டு இந்த கிரிஸ்பி இறால் வறுவல் செய்து உங்கள் குடும்பத்தினர் நலனை மேம்படுத்தலாம்..
என்ன தேவை?
இறால் (மீடியம் சைஸ் அல்லது ஜம்போ சைஸ்) – அரை கிலோ
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
காஷ்மீரி மிளகாய்த்தூள் – 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – அரை டீஸ்பூன்
மஞ்சள்தூள் – அரை டீஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – அரை டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லித்தழை – சிறிதளவு
பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை – சிறிதளவு
அரிசி மாவு அல்லது கான்ஃப்ளார் – 2 டீஸ்பூன
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
இஞ்சி – பூண்டு விழுது, காஷ்மீரி மிளகாய்த்தூள், கரம் மசாலாத்தூள், மஞ்சள்தூள், மல்லித்தூள், உப்பு, அரிசி மாவு அல்லது கான்ஃப்ளார் ஆகியவற்றை ஒன்று சேர்த்துக் கலக்கவும். இதில் இறாலைப் புரட்டி அரை மணி நேரம் ஊறவைக்கவும். ஒரு பானில் (pan) எண்ணெயைச் சூடாக்கி இறாலை மிதமான சூட்டில் வறுத்தெடுக்கவும் . கொத்தமல்லித்தழை, கறிவேப்பிலை தூவி அலங்கரிக்கவும்.
கிச்சன் கீர்த்தனா : மொஹல் மட்டன் கிரேவி