ஸ்ரீராம் சர்மா
இங்கிலாந்து நாட்டின் தென் கிழக்குத் துறைமுகத்தில்…
‘மூழ்காப் பெருங்கப்பல்’ எனும் செருக்கான அறிவிப்போடு அலைகடலதன் மேல் இறக்கி விடப்பட்ட ‘டைட்டானிக்’ எனும் அந்தக் கேளிக்கைக் கப்பல் வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலின் சின்னஞ்சிறு பனிப்பாறை ஒன்றை நெருங்கிய தருணம்…
எதிர்பாராத வகையிலதில் திடுமென மோதி – மூழ்கி – சர்வ நாசமடைந்து உலக மாந்தர்களை பெருந்துயரில் ஆழ்த்த, WHITE STAR LINE எனும் அந்த பிரித்தானிய நிறுவனம் விக்கித்துப் போனது.
டைட்டானிக் விபத்தை கூர்ந்து விசாரித்தவர்கள் அமெரிக்க செனட்டர் வில்லியம் ஆல்டன் ஸ்மித் மற்றும் பிரித்தானிய லார்ட் மெர்ஸி.
அந்தக் கோமான்கள் தங்களது தீர்ப்பின் முடிவாக என்ன தெரிவித்தார்கள் என்பதுதான் இந்தக் கட்டுரையின் அடி நாதமாகிறது. அப்படி என்னதான் சொன்னார்கள் என்பதைக் கட்டுரையின் முடிவில் காண்போம்.
டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் !

டைட்டானிக் பெருங்கப்பல் மூழ்கி ஏறத்தாழ 111 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று ‘டைட்டன்’ எனுமந்த நீர்மூழ்கிக் கப்பல் ஆழ்கடலில் சிக்கி மில்லி செகண்டுக்குள் சர்வ நாசமாகிப் போனதாக அறிவிக்கப்பட்டிருக்கின்றது.
அதில் சிக்கிக் காணாமல் போனது ஐந்து உயிர்கள். சிதறிப் போன ஒவ்வொரு உயிரும் பற்பல கோடி சொத்துக்களுக்கு சொந்தமானது.
ஏன் சிக்கியது ? ஏன் சிதறியது ?
டைட்டானிக் கப்பலில் சிக்கி அழிந்த உயிர்களுக்காக துடித்துப் பரிதவித்த இந்த உலகம், டைட்டன் நீர்மூழ்கிக் கப்பலில் சிக்கி அழிந்த அந்த ஐந்து உயிர்களுக்காக பெரிதும் பரிதவிக்காமல் அதை வெறும் செய்தியாக கடந்தது ஏன் ?
கவனிப்போம் !
உலக வாழ்வுக்கு பணம் முக்கியமானதுதான்.
ஆனால், அந்தப் பணமானது மேலகதிகமாக சேரச்சேர பதவியும் புகழும் வந்தடைந்து விடுகின்றது. பணமும் பதவியும் புகழும் கொழுக்கக் கொழுக்க பாழும் மனித மனம் என்ன செய்கிறது ? இன்னுமதிகம் இன்னுமதிகம் என நாடச் சொல்கிறது.
செயற்கையாக படைக்கப்பட்ட பணமும் மனிதர்களும் வசப்பட்டுப் போன பின்பு மனித ஈகோவுக்கு போர் அடித்துப் போகிறது.
அடுத்தக் கட்டமாக இயற்கையோடு போராடினால்தான் என்ன என்னும் வல்லாட்ட விருப்பம் எழுந்து விடுகிறது.
இயற்கையோ பொல்லாதது. தன்னை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களை அது போட்டுப் பார்த்துவிடக் கூடியது.
இன்று கண்டடையப்பட்ட கீழடியின் காலமே ஈராயிரத்து அறுநூறு எனத் தெரிய வருகின்றது. அதற்கு முன்பு எத்துனையோ ?
அங்கிருந்தே வைத்துக் கொண்டாலும் கூட இதுகாறும் எத்துனை எத்துனை செயற்கைகளை – எத்துனை எத்துனை ஆளுமைகளை தன்னுள் விழுங்கி ஸ்வாகா செய்திருக்கிறது பிரம்மாண்டமான இந்த இயற்கை என எண்ணும் போது எளிய மனம் ஆயாசப்பட்டுப் போகிறது !
ஆம், அந்த கம்பன் எங்கே ? கவிகாளமேகம் எங்கே ? ஔவை எங்கே ? இளங்கோதான் எங்கே ? அரிஸ்டாட்டில் எங்கே ? ப்ளேட்டோ எங்கே ? கார்ல் மார்க்ஸ் எங்கே ? ஷேக்ஸ்பியர்தான் எங்கே ?
சங்கத்து மன்னர்கள் – சேர சோழ பாண்டியர்கள் – நெப்போலியன்கள் – கில்ஜிக்கள் – ஆங்கிலேய ஜிகினாப் பிரபுக்கள் எனச் சகலரது வாழ்வையும் புயல் காற்றிடை மாட்டிய பூளைப் பூக்களாய் ஊதித் தள்ளியபடி…
நிலையானது இங்கொன்று உண்டெனில், அது நான் மட்டுமே என நிறைந்து நிற்கும் பெருஞ்சக்தி அல்லவா இயற்கை !
அப்படியான வல்லதொரு இயற்கையை சீண்டிப் பார்க்க முனைவது தகுமா ?
எல்லாம் அறிந்திருந்தும் பொல்லாத மனித மனமானது ஆகாசத்தைப் பார்த்து சொடக்குப் போடுகிறது.
தன் சக்திக்கு மீறிய ஒன்றைத் தன்வசப்படுத்துவதன் மூலம் – தான் பிறந்த காரணத்தை இந்த மண்ணில் நிலை நாட்டிவிட முடியும் என நம்பித் தொலைக்கின்றது .
அப்படியாகத்தான் பில்லியன் டாலர் சொத்துக்களும் புகழும் கொண்ட அந்த பெரும்பணக்காரர்கள் துணிந்து விட்டார்கள் போலும்…
இருப்பது போதாது அல்லது போரடித்துவிட்டது. அடுத்த கட்டம் போவோமே – அட, இன்னும் மேலேறி போய்த்தான் பார்ப்போமே எனும் மனக்கூவல் உலுக்கி ஆட்ட – அப்படியானவர்களுக்காகவே துவங்கப்பட்ட OCEAN GATE எனுமந்த வியாபார நிறுவனம் வசதியாய் வலை விரித்து நிற்க…
‘சாகஸ வேட்கை’ எனும் அசகாயப் பெயர் ஒன்றை அதற்கு சூட்டியபடி…
இரண்டு கோடி ரூபாய் பெருமானமுள்ள டிக்கட்டுகளை துணிந்து வாங்கிக் கொண்ட அந்தப் பெரும் பணக்காரர்கள் – எழுந்தால் இடிக்கும் அந்தமான் தனிச்சிறைக்கு ஈடானதந்த குறுகிய நீர்மூழ்கி இயந்திரத்துக்குள் புகுந்து கொண்டபடி…
மெல்ல மெல்ல கீழே இறங்கினார்கள் !
ஆம், அவர்கள்…

ஒருவேளை சோத்துக்கே அல்லாடும் புருண்டி – லைபீரியா – நைஜர் – மொசாம்பிக் – எத்தியோப்பியா – மத்திய ஆப்பிரிக்க குடியரசு – எரித்திரியா போன்ற ஏழை நாடுகளின் எளிய மக்களது பட்டினிப் பசிப்பிணி குறித்த எந்த விதமான மானுட மனக் கசிவுகளுமின்றி…
அன்றொருநாள் 1500 மனித உயிர்களை உப்புக்கடலோடு கரைந்து காணாமல் போகச் செய்த டைட்டானிக் எனுமந்த நாசகாரப் பெருங்கப்பல் அடிக் கடலாழத்தில் எப்படியெல்லாம் துவண்டுக் கிடக்கின்றது என்பதை ஆழ் கடலோடிக் காண…

- (எட்வர்ட் ஜே. ஸ்மித், 1912ல் மூழ்கிய டைட்டானிக் கப்பலின் கேப்டன்)
மெல்ல மெல்ல கீழிறிங்கிப் போனார்கள்.
ஏறத்தாழ 28 ஆயிரம் அடிகளைக் கொண்டது குளிரும் கும்மிருட்டும் சூழ்ந்த அந்த அட்லாண்டிக் கடல். டைட்டானிக் கப்பலோ அதன் பாதியளவில் அதாவது 13 ஆயிரம் அடிகளுக்குள் சிக்கி நிற்கிறது.

இயற்கைக்கு ஆட்பட்ட ஆழ்கடலில் அழுத்தங்களோ அவ்வப்போது மாறக் கூடியது.
ஒருவேளை 13 ஆயிரம் அடிகளைக் கடந்து 28 ஆயிரம் அடிகளுக்குள் நழுவ நேர்ந்தால் ஆழ்கடலின் அழுத்தம் தாங்காமல் அனைத்தும் சிதறிவிடுமென அவர்களுக்குப் புரியாமல் போனது ஏனோ !?
அந்த நீர்மூழ்கிக் கப்பலில் அவர்கள் இடுக்கிக் கொண்டு போனதன் நோக்கம் தாய் நாட்டைக் காப்பது அல்ல. கடல் வாழ் உயிரினிங்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டுமல்ல. சுற்றுலாவா எனில் அதுவுமல்ல.
கடலுக்கடியிலிருக்கும் இடுகாட்டு எச்சங்களைக் காணப் போனதோர் பகட்டுப் பயணம். அவ்வளவே ! ஒண்ணேமுக்கால் மணிநேரம்தான் அந்த வசதியான சிறைக் கூண்டுக்குள் அவர்கள் இருந்தார்கள். பிறகென்ன ஆனார்கள் ?
போனது. பலகோடிப்பெருமானமான அந்தப் பாண்டம் கண்காணாது போனது.
நுனி எலும்பும் அகப்படாத படிக்குக் ஐயகோவென கும்மிருட்டு அந்தகாரத்தில் கரைந்து போனது. வளரவேண்டிய குருத்தான அந்த அப்பாவி மாணவனை எண்ணித்தான் மனம் அடித்துக் கொள்கிறது!
எப்படியானாலும் மறைந்த அந்த உயிர்களின் ஆன்மாக்கள் அமைதியுற அனைவரும் உளமாற பிரார்த்தனை செய்வோம்.
அவர்களை இயற்கைக்குள் ஊடுறுவவிட்ட Ocean Gate எனும் அந்த வியாபாரக் கம்பெனியோ ‘அன்னவர்களின் சாகஸ நோக்கத்தை நாங்கள் உளமாற வழி மொழிகிறோம். அவர்தம் ஆழ்கடல் வேட்கையை எண்ணி எண்ணி அஞ்சலி செலுத்துகிறோம்’ போன்ற அலங்கார வார்த்தைகளை பூசி மெழுகி பசப்பி நின்றது.
அது, CATASTROPHIC IMPLOSION – அதாவது பேரழிவு பெருவெடிப்பாகும். ஆகவே, எங்கள் கைமீறியதொரு விபத்தாகிவிட்டது என அறிவித்து முடித்து விட்டது.
சரி, முடிவுக்கு வருவோம் !
அன்றந்த நாளில் டைட்டானிக் விபத்தை கூர்ந்து விசாரித்த அமெரிக்க செனட்டர் வில்லியம் ஆல்டன் ஸ்மித் மற்றும் பிரித்தானிய லார்ட் மெர்ஸி ஆகியோர் தங்களது முடிவாக என்ன சொன்னார்கள் தெரியுமா ?
:உலகீரே, இந்தப் பேரழிவை ‘கடவுளின் செயல்’ என்று மட்டுமே வகைப் படுத்த முடியும்…’ என்று சொல்லி வைத்தார்கள்.
அவர்களது அந்தக் கூற்றை இந்த உலகம் ஏற்றுக் கொண்டு விட்டது.
அதனையே, ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழ்ச் சித்தராம் நமது சிவவாக்கியப் பெருமானார் வேறுவிதமாக மிக அற்புதமாகச் சொல்லிப் போனார்…
ஓடமுள்ள போதெலாம் ஓடியே உலாவலாம் !
ஓடமுள்ள போதெலாம் உறுதிபண்ணிக் கொள்ளலாம் !
ஓடம் உடைந்தபோது ஒப்பிலாத வெளியிலே,
ஆடுமில்லை ; கோலுமில்லை ; யாருமில்லை ஆனதே !
ஆம்,
பல் இடுக்கில் பழை சோறு செயற்கை !
பொல்லாப் பழங்கருவியாம் இயற்கை !!
கட்டுரையாளர் குறிப்பு

வே.ஸ்ரீராம் சர்மா – எழுத்தாளர், இயக்குநர், பாடலாசிரியர், நாடகவியலாளர், வரலாற்று ஆராய்ச்சியாளர் என்று பன்முகத் திறமை பெற்றவர். 1994லேயே தனது ‘வெட்டியான்’ என்ற குறும்படத்துக்காக யுனெஸ்கோ சர்வதேச விருதைத் தமிழுக்காகப் பெற்றுத் தந்த முதல் இந்திய இயக்குநர். 300 ஆண்டுகளாக மறைக்கப்பட்டிருந்த வேலு நாச்சியாரின் வீர வரலாற்றை 12 ஆண்டுக் கால ஆய்வுக்குப் பிறகு மீட்டெடுத்து, அதை தியேட்டர் நாடகமாக உலகமெங்கும் நிகழ்த்திக்கொண்டிருக்கிறார். அதைத் திரைப்படமாக்கும் வேலையில் இருக்கிறார். இந்த நாடகத்துக்காக அமெரிக்காவின் மேரிலாண்ட் மாகாணத்தின் சிறப்பு விருதைப் பெற்றிருக்கிறார். திருவள்ளுவர் திரு ஓவியத்தை உலகுக்குத் தந்த ஓவியப் பெருந்தகை கே.ஆர்.வேணுகோபால் சர்மா அவர்களின் இளைய மகன்.
ஐஜி அஸ்ரா கார்க்கிற்கு சிறப்பு பதக்கம் அறிவிப்பு
“டெஸ்ட் கிரிக்கெட் கேப்டனாக பாண்டியா பொறுப்பேற்க வேண்டும்” – ரவி சாஸ்திரி
Comments are closed.