மழைக்காலத்துக்கு ஏற்ற உணவான காளானில் ஃப்ரைடு அயிட்டங்கள் மட்டுமல்ல… சூப் செய்தும் சுவைக்கலாம். நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கும் காளான், உடல் எடையைக் குறைக்கவும் உதவும். இந்த காளான் க்ரீமி சூப் அனைவருக்கும் ஏற்றது. ஆரோக்கியமானது.
என்ன தேவை?
காளான் – 100 கிராம்
கோதுமை மாவு – ஒரு டேபிள்ஸ்பூன்
பால் – ஒரு கப்
ஃப்ரெஷ் க்ரீம் – ஒரு டேபிள்ஸ்பூன்
சர்க்கரை, மிளகுத்தூள் – தலா ஒரு டீஸ்பூன்
கொரகொரப்பாக அரைத்த சீரகம் – அரை டீஸ்பூன்
வெண்ணெய் – ஒரு டேபிள்ஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
காளானை தண்ணீரில் கழுவி நறுக்கவும். பிரஷர் பானில் வெண்ணெயை சூடாக்கி, காளான் துண்டுகளைச் சேர்த்து வதக்கவும். பிறகு, கோதுமை மாவை தூவி ஒரு நிமிடம் வதக்கி, பால், சீரகம், உப்பு சேர்த்து, ஒரு விசில் வரும்வரை வேகவிட்டு இறக்கவும். ஆறியதும் கலவையை மிக்ஸியில் ஒருமுறை சுற்றி, பெரிய கண் உள்ள வடிகட்டியால் வடிகட்டவும். வடிகட்டியதை மீண்டும் அடுப்பில் வைத்து சர்க்கரை சேர்த்து ஒரு கொதி விடவும். பரிமாறுவதற்கு முன் மிளகுத்தூள் தூவவும். சூப் கிண்ணத்தில் ஊற்றி, துருவிய சீஸ் (அ) ஒரு டேபிள்ஸ்பூன் ஃப்ரெஷ் க்ரீம் சேர்த்துப் பரிமாறவும்.
குறிப்பு: காளான் சூப்புக்கு வேகவைப்பவற்றை குறைந்த நேரம் வேகவைத்தால் போதுமானது.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
சண்டே ஸ்பெஷல்: எடையைக் குறைக்க நினைப்போர் குறைவாகச் சாப்பிட வேண்டுமா?