உச்சநீதிமன்றம் அனுமதித்த நேரத்தை தாண்டி பட்டாசு வெடித்தால் வழக்குப்பதிவு செய்யப்படும் என்று சென்னை தெற்கு மண்டல ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹா இன்று (நவம்பர் 8) தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களிடம் பேசியபோது, “தீபாவளி மற்றும் அதற்கு முந்தைய நாள் சென்னையில் 18 ஆயிரம் காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட உள்ளனர். உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காலை 6 மணி முதல் 7 மணி வரையும் இரவு 7 மணி முதல் 8 மணி வரை மட்டுமே பட்டாசுகள் வெடிக்க வேண்டும்.
உச்சநீதிமன்ற உத்தரவை மீறி பட்டாசு வெடித்தால் பொதுமக்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்படும். பொதுமக்கள் தீபாவளியை பாதுகாப்போடும் சந்தோஷமாகவும் கொண்டாட வேண்டும். பாதுகாப்பான இடங்களில் மட்டுமே பட்டாசு வெடிக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் ஆணையர் சுதாகர், “தீபாவளியை முன்னிட்டு நவம்பர் 9,10,11-ஆம் தேதிகளில் 10 ஆயிரம் அரசு பேருந்துகள் வெளியூர்களுக்கு இயக்கப்படுகிறது.
இதற்காக கே.கே.நகர், கோயம்பேடு, மாதவரம், பூந்தமல்லி, தாம்பரம் பகுதிகளில் பேருந்து நிறுத்த வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ஈசிஆர் செல்கிற பேருந்துகள் கே.கே.நகரிலிருந்தும், திண்டிவனத்திற்கு தாம்பரத்திலிருந்தும், கிருஷ்ணகிரி, ஓசூருக்கு பூந்தமல்லியிலிருந்தும், ஆந்திராவிற்கு மாதவரத்திலிருந்தும், திருநெல்வேலி, நாகர்கோவில், மதுரைக்கு கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்தும் பேருந்துகள் இயக்கப்படும்.
இந்த தேதிகளில் கனரக வாகனங்கள் மாதவரம் ரவுண்டானா, வானகரம் ஜங்ஷன், அண்ணா நகர் ஆர்ச் பகுதிகளில் செல்ல அனுமதி கிடையாது. தீபாவளி முடிந்து பொதுமக்கள் ஊர் திரும்பும் போதும் இதே நடைமுறை பின்பற்றப்படும்” என்றார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…