விருதுநகர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் பட்டாசு வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா மூன்று லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே கணிஞ்சம்பட்டி கிராமத்தில் கந்தசாமி என்பவர் பட்டாசு ஆலை ஒன்றை நடத்தி வந்தார். இந்த பட்டாசு ஆலையில் அக்கம் பக்கம் கிராமங்களில் உள்ள ஏராளமான மக்கள் வேலை பார்த்து வந்தனர்.
இந்நிலையில் இன்று (ஜனவரி 19) எதிர்பாராத விதமாக திடீரென்று வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் பட்டாசு ஆலை கட்டிடத்தின் 10 அறைகள் தரைமட்டமாகின.
இந்த விபத்தின் போது இடிபாடுகளுக்குள் சிக்கி திருத்தங்கலைச் சேர்ந்த ரவி என்பவர் உயிரிழந்தார். மேலும் அதே பகுதியை சேர்ந்த சாமுவேல் ஜெயராஜ் என்பவர் படுகாயமடைந்தார்.
மேலும், இன்றைய தினமே, திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டம், பச்சைமலையான் கோட்டை கிராமம், பாலாஜி நகரில் உள்ள தனியாருக்குச் சொந்தமான கட்டடம் ஒன்றில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடி விபத்தில் ஜெயராமன் மற்றும் அவரது மனைவி நாகராணி ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் மாரீஸ்வரன், கருப்பசாமி, மாரிமுத்து, ராஜ்குமார் ஆகிய 4 தொழிலாளர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் அப்பகுதியில் மற்றும் பட்டாசு ஆலையில் வேலை பார்பவர்களின் குடும்பத்தினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இன்றைய வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு தலா 3 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
இது குறித்து வெளியான செய்திக் குறிப்பில், “விருதுநகர் மற்றும் திண்டுக்கல் வெடி விபத்தில் தொழிலாளர்கள் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வேதனையடைந்தேன். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் ஆறுதலைத் தெரிவித்துக் கொள்வதோடு அவர்களது குடும்பத்தினருக்கு தலா 3 லட்சம் ரூபாய் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்.
மேலும், படுகாயமடைந்த சாமுவேல் ஜெயராஜ்-க்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரண நிதி வழங்கவும், அரசு மருத்துவமனையில் சிறப்புச் சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மோனிஷா
’’மகளிர் ஆணைய தலைவிக்கே பாதுகாப்பு இல்லை’’ கொந்தளித்த சுவாதி மாலிவால்
மலிவான விமர்சனங்கள்: பிரியா பவானி சங்கர் ஆவேசம்!