புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உட்பட 10க்கும் மேற்பட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர்கள் சங்கமும், ஓய்வு பெற்ற அரசு ஊழியர்கள் சங்கமும் அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். CPS Abolition Movement plan protest
தொடர் போராட்டம்!
இந்த நிலையில் வரும் பிப்ரவரி 18ஆம் தேதி கருப்பு பேட்ச் அணிந்து அரசு அலுவலகங்களில் பணி செய்வது, வரும் 25ஆம் தேதி தற்செயல் விடுப்பு போராட்டம், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளான மார்ச் 1ஆம் தேதி, புதிய பென்ஷன் திட்டம் ஒழிப்பு சம்பந்தமாக மாவட்ட ஒருங்கிணைப்பாளர்களுக்கு பயிற்சி வகுப்பு நடத்துவது,
வரும் மார்ச் 7ஆம் தேதி மாவட்டம் தோறும் மறியல் போராட்டம் நடத்துவது, மார்ச் 13ஆம் தேதி இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் கருவூலங்கள் முன்பு போராட்டம் நடத்துவது, 19ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவது,
வரும் 17ஆம் தேதி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் பேரணி, 24ஆம் தேதி இன்சூரன்ஸ் காப்பீட்டு திட்டம் மோசடியை கண்டித்து சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என பலகட்ட போராட்டங்களை நடத்த அரசு ஊழியர்கள் சங்கம் திட்டமிட்டுள்ளது.
இதற்கிடையே சிபிஎஸ் (Contributory Pension Scheme) ஒழிப்பு இயக்கத்தின் மாநில அளவிலான ஆலோசனை கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பிரடெரிக் ஏங்கல்ஸ் தலைமையில் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்றது.
ஓய்வூதியம், பணிக்கொடை, சரண்டர் CPS Abolition Movement plan protest

இதைப்பற்றி பிரடெரிக் ஏங்கல்ஸிடம் மின்னம்பலம் சார்பாக தொடர்பு கொண்டு பேசினோம்.
“பழைய பென்சன் திட்டத்தை ரத்து செய்து 2003 ஏப்ரல் 1ஆம் தேதிக்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களை புதிய பென்சன் திட்டத்தில் கொண்டு வந்தனர்.
இந்த நிலையில் திமுக எதிர்க்கட்சியாக இருந்தபோது அக்கட்சிதலைவரும் தற்போதைய முதல்வருமான ஸ்டாலின், 2016 சட்டமன்றத் தேர்தல், 2019 மக்களவைத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதியாக புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்துவோம் என்றார்.
ஆனால் ஆட்சிக்கு வந்ததும் எதிர்மாறாக செயல்படுகிறார். பென்ஷன் திட்டம் என்பது அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் ஊதியத்தில் இருந்து 10 சதவிகிதம் பிடித்து, அதனுடன் மாநில அரசு 10 சதவிகிதம் டெபாசிட் செய்வதாகும்.
ஆனால் வெளி மாநில அரசுகளும், மத்திய அரசும் அரசு ஊழியர்களின் ஊதியத்தில் இருந்து 10 சதவிகிதத்தை பிடித்து அரசு சார்பில் 14 சதவிகிதம் போடுகிறார்கள்.
இந்த தொகையில் ஓய்வு பெறும் போது 60 சதவிகிதத்தை செட்டில்மெண்ட் செய்துவிட்டு, மீதமுள்ள 40 சதவிகிதத்தை நிரந்தர வைப்பு நிதியாக வைத்து, அதில் 6.5% வட்டியை பென்ஷனாக கொடுத்து வருகிறார்கள். இது மற்ற மாநிலங்களிலும் மத்தியிலும் நடந்து வருகிறது.
ஆனால் தமிழக அரசு ஓய்வு பெறும் போது, ஒரே செட்டில்மென்ட்டாக கொடுத்து முடித்துவிடுகின்றனர். இதனால் எந்தவொரு பலனும் இல்லை.
ஓய்வு பெற்றவர்களுக்கு வாழ்க்கைக்கான உத்தரவாதம் இல்லாமல் போய்விடுகிறது. அதுமட்டுமல்ல, காலம் காலமாக அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை (gratuity) வழங்கப்பட்டு வந்தது.
பணிக்கொடை என்பது ஒரு வருடத்துக்கு 15 நாளுக்கான ஊதியத்தை கொடுப்பார்கள். 33 வருடம் சர்வீஸ் முடிந்தால் 16 மாதம் 15 நாட்களுக்கான சம்பளத்தை கொடுப்பார்கள்.
இதை கடந்த அதிமுக ஆட்சியும் கொடுக்கவில்லை, இந்த ஆட்சியிலும் கொடுக்கவில்லை.
எங்களது உரிமையான சரண்டர் ( அளிக்கப்பட்ட விடுப்பினை எடுக்காமல் வரும் நாட்களுக்கான ஊதியம்) பணத்தையும் கொடுக்கவில்லை.
எந்த பலனும் இல்லை CPS Abolition Movement plan protest

புதிய பென்ஷன் திட்டத்தால் ஓய்வூதியம் இல்லை, குடும்ப ஓய்வூதியம் இல்லை, பணிக்கொடை இல்லை, வருங்கால வைப்பு நிதி இல்லை, ஓய்வூதிய குடும்ப பாதுகாப்பு நிதி இல்லை, ஓய்வூதியர் மருத்துவ காப்பீட்டு திட்டம் இல்லை, பொங்கல் சிறப்பு மிகை ஊதியம் (கருணை தொகை) இல்லை, ஓய்வூதியர் குறைதீர் ஆணையம் இல்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வு பெற்றவர்களுக்கும் ஓய்வூதியர் இயக்குநரகத்துக்கும் எவ்வித தொடர்பும் இல்லை.
இவையெல்லாம் புதிய பென்ஷன் திட்டத்தில் உள்ள தமிழக அரசின் ஊழியர்களுக்கு மறுக்கப்பட்டுள்ளது.
மொத்தமுள்ள 14 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் பணியிடங்களில் 2 லட்சம் காலி பணியிடங்கள் உள்ளன. இதில் 10 லட்சத்து 33 பேர் பேர் நிரந்தர பணியாளர்கள்.
பழைய பென்ஷன் திட்டம், புதிய பென்ஷன் திட்டத்தில் இல்லாமல், சிறப்பு காலமுறை ஊதிய திட்டத்தில் 3.80 லட்சம் பேர் பணி செய்கின்றனர்.
இதில் 2003க்கு முன் பணியில் சேர்ந்த 20 சதவிகிதம் பேர் மட்டும் பழைய பென்ஷன் திட்டத்தில் இருந்து வருகின்றனர். ஆனால் புதிய பென்ஷன் திட்டத்தில் 6,14,175 பேர் உள்ளனர். இவர்களுக்கு ஊழியர்கள் பங்களிப்பு, அரசு பங்களிப்பு வட்டித் தொகை மொத்தம் 73,974.64 கோடி ஆகும்.
இதில் 2024 மே 31 வரை இறந்தவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்கள் 38,169 பேர். இதில் 37,095 பேருக்கு 3,143 கோடி செட்டில்மென்ட் செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ளவர்களுக்கு செட்டில்மென்ட் செய்யப்படவில்லை.
ஊழியர்களிடம் பிடித்த பணத்தை வேறு எங்கேயோ அரசு முதலீடு செய்திருக்கிறதோ என்ற சந்தேகம் உள்ளது” என்கிறார்.
இந்தநிலையில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்ஷன் திட்டத்தை கொண்டு வரவும், சரண்டர், பணிக்கொடை வழங்க வலியுறுத்தியும் கன்னியாகுமரி முதல் ஜார்ஜ்கோட்டை வரை சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் நடைப்பயணம் மேற்கொள்ளவுள்ளது. CPS Abolition Movement plan protest