சென்னையில் மாடு முட்டி 9 வயது சிறுமி காயமடைந்த நிலையில் மாட்டின் உரிமையாளர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
சென்னை அரும்பாக்கத்தில் உள்ள எம்.எம்.டி.ஏ காலனி சாலையில் 9 வயது சிறுமி ஆயிஷா பள்ளி முடித்து விட்டு தனது தாய் மற்றும் சசோதரனுடன் நேற்று (ஆகஸ்ட் 9) நடந்து சென்றுள்ளார். அப்போது அந்த வழியில் நடந்து வந்திருந்த பசு மாடு ஒன்று சிறுமியை கொம்புகளால் தூக்கி வீசியது.
இதனால் கீழே விழுந்த சிறுமியை தொடர்ந்து பசு மாடு தாக்கி கொண்டே இருந்தது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய், மாட்டை விரட்ட முயற்சித்தார். ஆனால் பசு மாடு சிறுமியின் தாயையும் முட்டுவது போல அச்சுறுத்தியது. பின்னர் சாலையில் இருந்தவர்கள் ஒன்று சேர்ந்து மாட்டை விரட்டினர்.
மாடு தாக்கியதில் காயமடைந்த சிறுமி அமைந்தகரை பில்ரோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தலையில் நான்கு தையல்கள் போட்டு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதனையடுத்து மாட்டின் உரிமையாளர் விவேக் என்பவர் மீது பொதுமக்களின் உயிருக்கு அச்சுறுத்தல், கவனக்குறைவாக இருப்பது என இரண்டு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் குறித்து பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் கூறும்போது,
“சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில் பொது வெளியில் திரியும் மாடுகளைப் பிடிக்க மாநகராட்சி சார்பில் தொடர் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
பொது இடங்களில் மாடுகளைத் திரிய விடும் உரிமையாளர்களுக்கு 2 ஆயிரம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படுகிறது.
பொது இடங்களில் மாடுகள் சுற்றித் திரிவதை கட்டுப்படுத்தவும், தொடர்ந்து கண்காணிக்கவும் கால்நடை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னையில் மாடுகளை வளர்ப்பது உகந்ததல்ல. ஆனால் சட்ட விதிமுறைகளை பின்பற்றி மாடுகள் வளர்ப்பதில்லை.
மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, திருவான்மியூர், ஓட்டேரி கோயம்பேடு எம்எம்டிஏ காலனி உள்ளிட்ட பகுதிகளில் சில மாட்டின் உரிமையாளர்கள் இது போன்ற மாடுகளை தங்கள் கட்டுப்பாட்டில் வைக்காமல் தெருவில் விட்டுவிடுகின்றனர். இதனால் விபத்துக்கள் மற்றும் இது போன்ற சம்பவங்கள் ஏற்படுகிறது.
நேற்று சிறுமியை முட்டிய மாடு மற்றும் அதன் உரிமையாளரை பெரம்பூரில் உள்ள கால்நடை அலுவலகத்தில் வைத்துள்ளோம். மாட்டின் உரிமையாளர் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “சென்னை மாநகர எல்லைக்குள் கால்நடைகளின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. கால்நடைகளைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படாதது தான் இதற்கு காரணம்.
சென்னை மாநகரில் கால்நடை வளர்ப்பை சட்டத்தின் வழியாக மட்டுமே பார்க்க முடியாது. கால்நடைகள் சென்னையின் பூர்வகுடி மக்களின் வாழ்வாதாரம் சார்ந்தவை என்பதால், அந்தக் கோணத்திலும் தான் பார்க்க வேண்டியுள்ளது. அதேநேரத்தில் கால்நடைகளால் மக்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுவதை அனுமதிக்க முடியாது.
பொதுமக்களின் குறிப்பாக குழந்தைகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு சென்னையில் கால்நடைகளின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சியும், காவல்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட குழந்தைக்கு தரமான மருத்துவம் அளிக்கப்படுவதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மோனிஷா
ஜெயலலிதா புடவையை இழுத்தவர்கள் திரெளபதி பற்றி பேசுகின்றனர்: நிர்மலா சீதாராமன்
எய்ம்ஸ் மருத்துவமனை: மக்களவையில் அனல் பறந்த விவாதம்!