covid19 spread in tamilnadu
கேரளாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில் மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளையே அச்சுறுத்திய நிலையில் கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் குறைந்துள்ளது.
இந்நிலையில் தற்போது மலேசியா, சிங்கப்பூர், இந்தோனேஷியா போன்ற தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தற்போது கேரளாவில் தொற்று பரவல் அதிகரித்து வருவதாகவும் மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
கடந்த ஒரு மாதத்தில், கேரளாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 33ல் இருந்து 768 ஆக உயர்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தமிழ்நாட்டிலும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் கொரோனா தொற்று குறித்து மக்கள் பதற்றமடைய வேண்டாம் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் இன்று (டிசம்பர் 15) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்,
“நேற்று சிங்கப்பூரில் இருக்கின்ற நண்பர்களோடும், மருத்துவர்களோடும் பேசினேன். அங்கு 3,000-க்கும் அதிகமானவர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது குறித்து கேட்டபோது,
இந்த பாதிப்பு 3 அல்லது 4 நாட்கள் தொண்டை வலி, இருமல் ஆகிய அறிகுறிகளுடன் சரியாகி விடுகிறது என்று சொல்லியுள்ளார்கள். எனவே இதற்கு பெரியளவில் பதற்றப்படவேண்டிய அவசியமில்லை.
தமிழ்நாட்டை பொறுத்தவரை ஆர்டிபிசிஆர் பரிசோதனை கூடங்கள் அரசின் சார்பில் 78 இடங்களிலும் தனியார் இடத்தில் 253 என மொத்தம் 331 ஆர்டிபிசிஆர் பரிசோதனை மையங்கள் இயங்கி வருகிறது.
கேரளாவில் தொற்றின் எண்ணிக்கை கூடி கொண்டிருப்பதால் தமிழ்நாட்டிலும் காய்ச்சல் பாதிப்புகள் எங்கெல்லாம் இருக்கிறதோ அங்கெல்லாம் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகப்படுத்த சொல்லப்பட்டுள்ளது.
அந்த வகையில் நேற்றைக்கு 264 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. கடந்த 2 அல்லது 3 மாதங்களுக்குப் பிறகு 200-க்கும் மேற்பட்ட பரிசோதனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று 8 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் சென்னையை சேர்ந்தவர்கள் 2 பேர். கடந்த 7 மாதங்களாகவே ஒற்றை இலக்க பாதிப்பு இருந்து வருகிறது. எனவே இதில் பெரிய அளவில் பயப்பட வேண்டிய அவசியமில்லை. பாதிக்கப்பட்டவர்களுக்கு இருமல், சளி தான் இருக்கிறது.
கொரோனாவை பொறுத்தவரை ஆரம்பத்தில் இருந்து கொரோனா, ஆல்ஃபா, பீட்டா, டெல்டா, டெல்டா பிளஸ், ஒமிக்ரான், ஒமிக்ரானில் 10-க்கும் மேற்பட்ட வகைகள் என்று பல வகைகளிலான உருமாற்றங்களை பெற்று வருகிறது. தற்போது பரவி வருவது எந்த வகையான உருமாற்றம் என்று கண்டறிவதற்காக மாதிரிகளை சேகரித்து ஆய்விற்கு அனுப்பியுள்ளோம். ஆய்வு முடிவுகள் வந்த பிறகு, தற்போது பரவி வருவது எந்த வகையான கொரோனா என்று அறிவிக்கப்படும்” என்றார்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
மோனிஷா
14 எம்பிக்கள் சஸ்பெண்ட் : எதிர்க்கட்சிகளுக்கு ஜெகதீப் தன்கர் அழைப்பு!
‘லியோ’ல அது தப்பாகிருச்சு… இனிமே அதை செய்ய மாட்டேன்: லோகேஷ் கனகராஜ்
covid19 spread in tamilnadu