கொரோனா காலக்கட்டத்தில் பணியமர்த்தப்பட்டு பணிநீக்கம் செய்யப்பட்ட 3290 செவிலியர்களுக்கு மீண்டும் பணி ஆணை வழங்கக்கோரி எம்ஆர்பி செவிலியர் சங்கம் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது.
கொரோனா பேரிடர் காலக்கட்டத்தில் தற்காலிக செவிலியர்களாக பணியமர்த்தப்பட்டவர்கள் பின்னர் அப்பணியிலிருந்து விடுவிக்கப்பட்டனர்.
பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களுக்கு மீண்டும் பணி ஆணை வழங்கக்கோரி செவிலியர்கள் தொடர்ச்சியாக போராட்டத்தை முன்னெடுத்து வருகிறார்கள்.
இதுதொடர்பாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆலோசனை கூட்டம் தோல்வியில் முடிந்தது.
இந்தநிலையில் பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளனர்.
இதுகுறித்து எம்ஆர்பி கோவிட் செவிலியர் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “2020-ஆம் ஆண்டு கொரோனா பேரிடர் காலக்கட்டத்தில் 6000 செவிலியர்கள், 300 மருத்துவர்கள் தற்காலிகமாக பணியமர்த்தப்பட்டார்கள்.
இதில் 3000 செவிலியர்கள் தற்காலிக செவிலியர் பணியிலிருந்து நிரந்தர செவிலியர்களாக பணி மாற்றம் செய்யப்பட்டனர். 300 தற்காலிக மருத்துவர்களும் நிரந்தர மருத்துவர்களாக பணிமாற்றம் செய்யப்பட்டனர்.
மீதமுள்ள 3290 தற்காலிக செவிலியர்களுக்கு அப்போது காலிப்பணியிடம் 3300 இருப்பதால் நிரந்தர தன்மையுடைய செவிலியராக பணி கோரிக்கை வைக்கப்பட்டது. இக்கோரிக்கையை ஏற்று அரசு தரப்பில் 2022-ஆம் ஆண்டு மார்ச் 8-ஆம் தேதி கோரிக்கையை நிறைவேற்றுவதாக உறுதியளிக்கப்பட்டது.
ஆனால் அரசு அளித்த வாக்குறுதியை மீறி திமுக தேர்தல் வாக்குறுதி 365-க்கு எதிராகவும் 31.12.2022 இரவில் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி 3 ஆண்டு பணி செய்த செவிலியர்களை பணி நீக்கம் செய்தது தமிழ்நாடு அரசு.
அரசு தரப்பில் பிற மாவட்ட சுகாதார சங்கத்தின் மூலம் தற்காலிக மாற்றுப்பணி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. ஆனால் அத்தகைய பணி எதுவும் வழங்கப்படவில்லை. இந்தநிலையில் எங்களுக்கு ஏற்பட்ட அவலநிலையை கருத்தில் கொண்டு வேறு வழியின்றி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தோம்.
இவ்வழக்கில் உயர்நீதிமன்றம் பாதிக்கப்பட்டுள்ள செவிலியர்களுக்கு உரிய பணிநியமன முறை பின்பற்றப்பட்டுள்ளது என்று கூறி 6 வாரங்களுக்குள் மீண்டும் அரசு பணி வழங்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு கடந்த ஜூலை 12-ஆம் தேதி உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவினை நிறைவேற்றாததை கண்டித்து தொடர் உண்ணாவிரத போராட்டத்தை முன்னெடுத்துள்ளோம். இவ்விஷயத்தில் முதல்வர் தலையிட்டு தொகுப்பூதிய பணியை உடனடியாக வழங்க ஆவண செய்ய வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளது.
செல்வம்
“தமிழ் உரிமைக்காக போராடியவர் சிலம்பொலியார்” – ஸ்டாலின்
உங்க ஊர்ல அடிப்படை பிரச்சினையா? உடனே தீர்க்க ’ஊராட்சி மணி’க்கு போன் பண்ணுங்க!