கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவித்து தமிழ்நாடு அரசு இன்று (பிப்ரவரி 18) அரசாணை வெளியிட்டுள்ளது.
கடந்த 2019ம் ஆண்டு சீனாவில் தோன்றிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி இதுவரை 68 லட்சத்திற்கும் மேலான உயிர்பலிகளை வாங்கியுள்ளது.
இந்தியாவிலும் பலத்த தாக்கத்தை ஏற்படுத்திய கொரோனா தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தன.
அதன் ஒருபகுதியாக நாடு முழுவதும் பல்வேறு கட்ட ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டிலும் 2020ம் ஆண்டு மார்ச் 25 முதல் ஜூன் 30 வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இந்த காலத்தில் மருத்துவம், பேரிடர் மேலாண்மை, காவல்துறை, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு, மின்சாரம், குடிநீர் வழங்கல் தலைமை செயலகம், கருவூலங்கள் உள்ளிட்ட அத்தியாவசிய துறைகள் தவிர்த்து பிற அரசு துறைகளுக்கு விடுப்பு வழங்கப்பட்டது.
அதனால் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்த அரசு ஊழியர்கள், கொரோனா காலத்தில் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவிக்க கோரி பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர்.
சிறப்பு விடுப்பாக அறிவிப்பு
இந்நிலையில் கொரோனா ஊரடங்கு காலத்தில் அரசு ஊழியர்கள் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவித்து தமிழ்நாடு அரசு இன்று அரசாணை வெளியிட்டுள்ளது.
அந்த அரசாணையில், 2020ம் ஆண்டு மார்ச் 25ம் தேதி முதல் ஜூன் 30ம் தேதி வரை அரசு ஊழியர்கள் பணிக்கு வராத காலத்தை சிறப்பு விடுப்பாக அறிவிக்கப்படுகிறது. அதேபோல் கொரோனா ஊரடங்கு காலத்தில் பணிக்கு வராத நாட்களை பணிக்காலமாக அறிவிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2021ம் ஆண்டு ஏற்பட்ட கொரோனா இரண்டாம் அலை காரணமாக மே 10ம் தேதி முதல் ஜூலை 4ம் தேதி வரை ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.
இந்தகாலத்தில் விடுமுறை அளிக்கப்பட்டிருந்த பிற துறைகளை சார்ந்த ஊழியர்களுக்கு, விடுமுறை அளிக்கப்பட்ட காலத்தை பணிக்காலமாக கருதி தகுதியுள்ள அல்லது சிறப்பு விடுப்பாக அறிவித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
மேலும், அரசு ஊழியரோ அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களோ கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு தனிமை படுத்தப்பட்டிருந்தாலோ அல்லது கட்டுப்பாட்டு மண்டலங்களுக்குள் வசித்தாலோ அந்த தனிமை படுத்தப்பட்ட காலம் சிறப்பு விடுமுறை காலமாக கருத வேண்டும்.
தமிழ்நாடு அரசின் பெண் பணியாளர்களை பொறுத்தவரை கர்ப்பிணி பெண் ஊழியர்களுக்கு விடுமுறை காலமாக கருதப்படும் எனவும்,
தலைமை செயலக பணியாளர்களை பொறுத்தவரை கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், நோய்வாய்ப்பட்ட பணியாளர்களுக்கு விடுமுறையாக அறிவிப்பது குறித்து அந்தந்த துறை செயலாளர்களே முடிவெடுக்கலாம் எனவும் அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா
மெக்கலத்தின் பிரம்மாண்ட சாதனை : தட்டி பறித்த பென் ஸ்டோக்ஸ்
வடமாநில தொழிலாளர்கள் குறித்து சர்ச்சை பேச்சு: சீமான் மீது புகார்!