கோவை கார் வெடிப்பு: யாருக்கு வைத்த குறி?

தமிழகம்

கடந்த 23 ஆம் தேதி கோவை உக்கடம் அருகில் உள்ள கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு கார் வெடித்த சம்பவத்தில் ஜமேஷா முபீன் என்பவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

இச்சம்பவத்தில் விடைதெரியாத பல கேள்விகளுக்கு பதில் தேடுவதில் மத்திய மற்றும் மாநில புலனாய்வு அமைப்புகள் மும்முரமாக உள்ளன.

அதில் முக்கியமான கேள்வி ஒன்று,’வெடிமருந்துடன் கேஸ் சிலிண்டர்கள் நிரப்பப்பட்ட கார் எங்கே கொண்டு செல்ல திட்டம் தீட்டப்பட்டது?’

இது குறித்து, இவ்வழக்கை விசாரித்து வரும் டீமில் இருக்கும் பெயர் சொல்ல விரும்பாத ஒரு அதிகாரி, “ஒருவேளை முபீன் ஓட்டிச்சென்ற அந்த கார், கோட்டை மேடு பகுதியில் பிரச்சனை ஆகாமல் இருந்திருந்தால், அந்த வாகனம் எங்கே சென்றிருக்கும், அதனுடைய டார்கெட் எதுவாக இருந்திருக்கும்? என்ற தகவலை விசாரிக்கும் போது கிடைக்கும் தகவல் பகீர் ரகமாக உள்ளது” என்று குறிப்பிட்டார்.

ஒருவேளை இது குறிப்பிட்ட நபர்களை குறிவைத்து மேற்கொள்ளப்பட்ட சம்பவமா? அல்லது மிகபயங்கரமான உயிர்சேதத்தை ஏற்படுத்த போட்ட திட்டமா? இல்லை, குறிப்பிட்ட அரசு அலுவலகங்களை சேதப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் அந்த காரை முபீன் ஓட்டிசென்றானா? என்ற கோணத்தில் விசாரணையை முடுக்கிவிட்டுளோம். அதில் சில தகவல்களும் கிடைத்துள்ளது.” என்று தெரிவித்தார்.

ஏற்கனவே பிஜேபி-யின் மாநில தலைவர்கள் சிலருக்கு ஆபத்து உள்ளதாக மத்திய உளவுத்துறை தமிழக அரசிற்கு நோட் போட்டிருப்பதால், அவர்களுக்கான பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது தமிழக காவல் துறை.

Covai car blast what is the target

பிஎப்ஐ யின் தடைக்கு பின்னால் நடந்த சில பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்களில் தொடர்புடையவர்களை கைது செய்யும் போது, அச்சம்பவங்களில் தொடர்பு இல்லாத சிலரையும் போலீசார் கைது செய்துள்ளதாக கூறுகின்றனர் கோவையில் உள்ள சில இஸ்லாமிய அமைப்புகள்.

இதற்கு பழிவாங்கும் நோக்கில் கூட இது போன்ற தாக்குதல்களை திட்டமிட்டு இருக்கலாம் என்று மத்திய உளவுத்துறையை சேர்ந்த அதிகாரி ஒருவர் குறிப்பிடுகிறார்.

மேலும் அவர் கூறுகையில், “2019 ஆம் ஆண்டு, இலங்கையில் ஈஸ்டர் பண்டிகையின் போது தான் இது போல ஒரு குண்டு வெடிப்பு நிகழ்ந்தது. அதே மோடஸ் ஆஃபிரெண்டியை (Modus Operandi) இங்கயும் செயல் படுத்த திட்டம் தீட்டியிருக்கலாம்.
அதுபோல, மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் இதுபோன்ற ஒரு அசம்பாவிதம் நடந்திருந்தால், அதனால் ஏற்பட்ட உயிர்ச்சேதம் மிக கடுமையாக இருந்திருக்கும்” என்று கூறி அதிரவைத்தார் அந்த அதிகாரி.

“நேற்று முதலமைச்சர் ஸ்டாலினின் உயர்மட்ட பாதுகாப்பு மீட்டிங்கிற்கு பிறகு தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையை கூர்ந்து கவனித்தால் அதில் பல விஷயங்கள் மறைமுகமாக குறிப்பிடப்பட்டுள்ளன. அதில் முக்கியமான தகவல், ‘மாநிலம் தாண்டிய பரிமாணங்களும், பன்னாட்டு தொடர்புகளும் இருக்க வாய்ப்புள்ளதால் இவ்வழக்கின் விசாரணையை என்ஐஏ விற்கு மாற்றப்படுவதாக’ குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவே இவ்வழக்கின் தன்மையை உணர்த்தும் செய்தி” என்று தெரிவித்தார், நம்மிடம் பேசிய உளவு துறை அதிகாரி .

இது தொடர்பாக நாம் விசாரித்த போது, கிடைத்த தகவல்கள் மேலும் பகீர் ரகம்.

இது குறித்து கேரளாவை சேர்ந்த மூத்த பத்திரிக்கையாளர் ஒருவர் கூறுகையில், “போலீசார் மற்றும் உளவு அமைப்புகளால் பாதிக்கப்படும் இசுலாமிய குடும்பங்களை சேர்ந்த சில இளைஞர்களை தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு மார்க்கத்தின் பெயரில் தவறான போதனைகள் தந்து, இது போன்ற செயல்களில் ஈடுபடுத்துகின்றனர் சில அடிப்படைவாத அமைப்புகள்.”

மேலும், “தமிழகத்தில் செயல்படும் இவர்களின் புகலிடமாக கேரளா மாநிலம் ஆழப்புழாவின் சில பகுதிகள் இருக்கின்றன. அப்பகுதிகளுக்குள் விசாரணை என்ற பெயரில் காக்கிச்சட்டை போட்ட யாரும் அவ்வளவு எளிதில் நுழைந்து விட முடியாது. தடை செய்யப்பட்ட பிஎப்ஐ மிக வலுவாக உள்ள பகுதி இது. இந்த வருடம் மே மாதம் பிஎப்ஐ அங்கு நடத்திய மிகப்பிரமாண்டமான பேரணியே இதற்கு உதாரணம்” என்று கூறினார் அந்த பத்திரிக்கையாளர்.

இதுகுறித்து தமிழக காவல் துறையை சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது “என்ஐஏ இவ்வழக்கை விசாரித்தாலும், தமிழக காவல் துறை தனியாக இச்சம்பவத்தின் வேர்களை தேடி கண்டுப்பிடித்து அதை முற்றிலுமாக அகற்றும் என்றும், அதற்கான செயல்பாடுகள் முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும், தமிழகம் எப்போதும் போல அமைதியான மாநிலமாக திகழும் “என்று குறிப்பிட்டார்.

வினோத் அருளப்பன்

சென்னையில் நாளை தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்!

ஒரே சின்னம்: மொபைல் பே நிறுவனத்துக்கு  இடைக்காலத் தடை!

+1
0
+1
2
+1
0
+1
1
+1
0
+1
1
+1
0

Leave a Reply

Your email address will not be published.