கோவையில் கார் வெடித்ததில் உயிரிழந்த ஜமேசா முபின் வீட்டில் மேற்கொண்ட சோதனையில் ரகசிய குறியீட்டுடன் சீட்டு ஒன்று போலீசாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 23ஆம் தேதி கோவை கோட்டை ஈஸ்வரன் கோவில் அருகே கார் வெடித்த விபத்தில் உயிரிழந்த ஜமேசா முபின் குறித்தான விவரங்களை மாநகர போலீசார் சேகரித்து வருகின்றனர்.
இந்த வழக்கில் 5 பேரை கைது செய்து தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்தும் விசாரித்து வருகின்றனர்.
வழக்கை கோவை போலீசார் விசாரித்து வரும் நிலையில், விரைவில் என்.ஐ.ஏ அதிகாரிகளும் விசாரணை நடத்தவுள்ளனர்.

இதற்காக டெல்லியிலிருந்து கோவை வந்துள்ள என்.ஐ.ஏ அதிகாரிகள் வழக்கு தொடர்பான விவரங்களைச் சேகரித்து வருகின்றனர்.
இன்று பிற்பகல் கார் வெடித்த இடத்தில் ஆய்வு செய்யவுள்ளனர்.
இதனிடையே கோவை கோட்டைமேடு, எச்.எம்.பி.ஆர். தெருவில் உள்ள முபின் வீட்டில் போலீசார் நடத்திய சோதனையில் கோவை மாநகர் பகுதியில் குறி வைக்கப்பட்ட முக்கிய இடங்கள் குறித்த சீட்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அதில், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மாநகர காவல் ஆணையாளர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், ரேஸ்கோர்ஸ் உள்ளிட்ட பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாகச் சுற்றுலா தலங்கள் என ரகசிய குறியீட்டில் எழுதப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஜமேசா முபின் இலங்கை குண்டு வெடிப்பில் கைது செய்யப்பட்ட முகமது அசாரூதீனின் பேஸ்புக் நண்பராக இருந்துள்ளதும், ஏற்கனவே என்.ஐ.ஏ அதிகாரிகள் முபினிடம் விசாரணை மேற்கொண்டதும் தெரியவந்ததுள்ளது.
பிரியா