குற்றாலத்தில் செயற்கை அருவிகளைத் தடுக்க தமிழக அரசு குழு அமைத்ததற்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை பாராட்டு தெரிவித்துள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வினோத் என்பவர் ஒரு பொதுநல மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவில் தென்காசி மாவட்டத்தில் உள்ள குற்றால அருவிகளில் சீசன் நேரங்களில் அதிகளவு சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
ஆனால் இயற்கையாக அருவிகள் பாயும் வழிகளை அடைத்து ரிசார்ட் உரிமையாளர்கள் செயற்கையான அருவிகளை உருவாக்குகின்றனர்.
இதனால் இயற்கையான நீர்வீழ்ச்சிகள் தடை செய்யப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்,
செயற்கை அருவிகளை உருவாக்கும் ரிசார்ட் உரிமையாளர்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்த வழக்கு தொடர்பாக, இயற்கையாக வரும் நீர்வழிச் சாலைகள் உடைக்கப்பட்டிருந்தால் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு பிறப்பித்திருந்தது.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று(டிசம்பர் 1) மீண்டும் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விசாரணைக்கு வந்தது.
விசாரணையின் போது அரசு தரப்பில், தமிழக அரசு உயர்நீதிமன்ற உத்தரவைப் பின்பற்றும் வகையில் சுற்றுலாத்துறை இயக்குநர், நில நிர்வாக ஆணையர் உட்பட 10 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது என்று நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையைப் பார்த்த நீதிபதிகள், தமிழக அரசுக்குப் பாராட்டு தெரிவித்தனர். மேலும் 5நாட்களுக்கு முன்பு தான் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
உடனடியாக நீர்வீழ்ச்சிகளைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கில் தமிழக அரசு இது போன்ற ஒரு குழு அமைத்துள்ளது.
இந்த குழு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது, எடுக்கப்போகிறது என்ற நிலை அறிக்கையை நாளை(டிசம்பர் 2) தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளனர்.
மோனிஷா
ஆன்லைன் மோசடி: 6 நாளில் ரூ.32 லட்சத்தை இழந்த இளைஞர்!
சென்னையில் சர்வதேச புத்தக கண்காட்சி!