அரசுப் பணிக்குத் தேர்வு நடத்தியது தொடர்பாக உண்மை தகவல்களுடன் செப்டம்பர் 19ஆம் தேதி டிஎன்பிஎஸ்சி செயலாளர் விளக்கமளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கூறியுள்ளது.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய தேர்வில், உரிய மதிப்பெண்கள் பெற்றும் தன்னை தேர்வு செய்யவில்லை என்று திருப்பூரைச் சேர்ந்த சாய்புல்லா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கில் மனுதாரருக்குச் சாதகமாகத் தீர்ப்பு வந்ததால் அதை எதிர்த்து, டிஎன்பிஎஸ்சி சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ்குமார் மற்றும் குமரேஷ் பாபு அமர்வு, தேர்வில் நிர்ணயிக்கப்பட்ட கட் ஆப் மதிப்பெண்களை விட குறைந்த மதிப்பெண்களைப் பெற்ற 4 பேரைத் தேர்ந்தெடுத்தது தொடர்பாகக் கேள்வி எழுப்பி, விளக்கமளிக்க டிஎன்பிஎஸ்சி செயலாளருக்கு உத்தரவிட்டது.
இந்த வழக்கு மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தபோது, டிஎன்பிஎஸ்சி செயலாளர் பதில் மனு தாக்கல் செய்தார். அப்போது, ஏற்கனவே நீதிமன்றம் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கவில்லை என நீதிபதிகள் அதிருப்தி தெரிவித்தனர்.
இந்த தேர்வு தொடர்பான உண்மைத் தகவல்களை மறைக்க முயற்சித்துள்ளதாகவும், இது நீதிமன்றத்திற்குத் தவறான தகவல்களை வழங்கியதாகக் கருதவேண்டும் என்பதால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
அப்போது, டிஎன்பிஎஸ்சி சார்பில், முழு தகவல்களுடன், மனுத்தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது..
இதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை 19 தேதிக்கு ஒத்திவைத்தனர்.
அன்றைய தினம், ஆவண ஆதாரங்களுடன் முறையான விளக்க மனுவைத் தாக்கல் செய்யவில்லை என்றால், நீதிமன்றத்திற்கு உண்மை தகவல்களை மறைத்தற்காக நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க உத்தரவிட நேரிடும் எனவும் எச்சரிக்கை விடுத்தனர்.
பிரியா