அவனியாபுரம் ஜல்லிக்கட்டு விழாக்குழு அமைப்பது தொடர்பான வழக்கில் மதுரை உயர்நீதிமன்ற கிளை இன்று (ஜனவரி 9) புதிய உத்தரவு பிறப்பித்துள்ளது.
தைத்திருநாளான ஜனவரி 15 பொங்கல் அன்று மதுரையில் நடைபெறும் முதல் ஜல்லிக்கட்டு போட்டியானது அவனியாபுரத்தில் நடைபெற உள்ளது.
தொடர்ந்து இரு சமூகத்தினர் இடையே மோதல் ஏற்பட்ட நிலையில், இந்தாண்டும் மாவட்ட நிர்வாகமே அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை ஏற்று நடத்த உள்ளது.
இதற்கிடையே அவனியாபுரத்தைச் சேர்ந்த முனியாண்டி என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாக்கல் செய்திருந்தார்.
அதில், ’அலங்காநல்லூர் மற்றும் பாலமேடு ஆகிய ஊர்களில் அரசு நடத்தும் ஜல்லிக்கட்டு விழாவில் அனைத்து சமூகத்தை சேர்த்து கமிட்டி அமைத்து ஜல்லிக்கட்டு விழா நடத்தப்படுகிறது.
அதேபோல அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியிலும் அனைத்து சமுதாயத்தினரையும் சேர்த்து விழாக்குழு அமைக்க உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ண குமார், உதயகுமார் அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ”அவனியாபுரம் ஜல்லிக்கட்டை பொறுத்தவரை ஆலோசனைக்குழு, ஒருங்கிணைப்பு குழு என்று இரண்டு குழு உள்ளது. ஆலோசனைக்குழுவில் கிராமத்தைச் சேர்ந்த அனைத்து தரப்பினரும் உள்ளனர்.
ஒருங்கிணைப்பு குழுவில் மாவட்ட ஆட்சியர், காவல்துறை மற்றும் கால்நடைத்துறையைச் சேர்ந்த அரசு அதிகாரிகள் மட்டுமே உள்ளனர். இதனால் தற்போது எந்தவித பிரச்சனையும் இல்லை” என்று அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
அப்போது குறுக்கிட்ட மனுதாரர் வழக்கறிஞர், ”அரசு அதிகாரிகள் மட்டுமே இருக்கும் ஒருங்கிணைப்பு குழுவில் கிராமத்தை சேர்ந்த அனைத்து சமுதாய தரப்பினரும் இடம்பெற வேண்டும் என்று தான் மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இருதரப்பு வாதத்தையும் கேட்ட நீதிபதிகள் அமர்வு, “மதுரை ஆட்சியர் அலுவலகத்தில் நாளை மாலை நடைபெற இருக்கும் அமைதி பேச்சுவார்த்தை கூட்டத்தில் அனைத்து சமூகத்தை சேர்ந்தவர்களையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தி உரிய முடிவெடுக்க வேண்டும். அவற்றை முழுமையாக வீடியோ பதிவு செய்ய வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்து வழக்கு விசாரணையை வரும் 11ஆம் தேதி ஒத்திவைத்தனர்.
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ்ஆப் சேனலில் இணையுங்கள்…
கிறிஸ்டோபர் ஜெமா
அதிமுக வாக்குகளை நீக்க திமுக சதி: ஜெயக்குமார்
அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.1000: தமிழக அரசு அறிவிப்பு!