தமிழ்நாடு கேபிள் டிவிக்கு நீதிமன்றம் உத்தரவு!

Published On:

| By Jegadeesh

 

தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேசன், உள்ளூர் கேபிள் டிவி ஆப்ரேட்டர்களிடம் வாடகை பாக்கியை வசூலிக்க இடைக்கால தடை உத்தரவை சென்னை உயர்நீதி மன்றம் இன்று (ஜூலை 13) பிறப்பித்துள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நாடு முழுவதும் கேபிள் டிவி டிஜிட்டல் மயமாக்கப்பட்டது. ஆனால் தமிழகத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு தான் இது நடைமுறைப் படுத்தப்பட்டது.

இதனிடையே தான் கடந்த 2017-ம் ஆண்டுக்கு முன் தங்களுக்கு செலுத்த வேண்டிய தொகையை செலுத்தவில்லை எனக் கூறி, அதை வசூலிக்கும் நடவடிக்கையாக, தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன், உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு உத்தரவிட்டிருந்தது.

இதை எதிர்த்தும், வசூல் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரியும் தமிழ்நாடு கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொது நல சங்கம் சார்பிலும், சில உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சார்பிலும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு ஒன்று தக்கல் செய்யப்பட்டிருந்தது.

அதில், “எந்த நோட்டீசும் கொடுக்காமல் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேஷன் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. எந்த ஆதாரங்களும் இல்லாமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது” என்று மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்நிலையில், இந்த மனு நீதிபதி சேஷசாயி முன்பு இன்று (ஜூலை 13) விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதி, உள்ளூர் கேபிள் டிவி ஆபரேட்டர்களிடம் இருந்து 2017 ஆம் ஆண்டுக்கு முன் செலுத்த வேண்டிய பாக்கி தொகையை வசூலிக்க தமிழ்நாடு அரசு கேபிள் டிவி கார்ப்பரேசனுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டார்.

மு.வா.ஜெகதீஸ் குமார்

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்: தங்கம் வென்ற இந்திய வீரர்கள்!

அமுதம் அங்காடியில் தக்காளி, பருப்பு : விலை இதோ!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Leave a Comment