கோவில் திருவிழாவில் ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்த கடுமையான கட்டுப்பாடுகளை விதித்து உயர் நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
திருச்சி, மணப்பாறை, சிவகங்கை, ராமநாதபுரம் புதுக்கோட்டை உட்பட்ட ஊர்களில் உள்ள கோவில்களில் திருவிழாக்களை முன்னிட்டு இரவு நேரத்தில் ஆடல் பாடல் கலை நிகழ்ச்சிக்கு அனுமதிக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
இந்த மனுக்களை நீதிபதி சக்தி குமார சுகுமார குருப் விசாரணை செய்து உத்தரவு பிறப்பித்தார்.
அதில் ஆடல் பாடல் நிகழ்ச்சியில் ஆபாச நடனமோ அல்லது அநாகரிகமான உரையாடல்களோ இருக்கக்கூடாது. நாகரிகமான உடைகள் அணிய வேண்டும். இரட்டை அர்த்த பாடல்கள் இடம்பெறக்கூடாது.
எந்த ஒரு அரசியல் கட்சி அல்லது மதம், சமூகம் அல்லது சாதியை குறிப்பிடும் விதத்தில் பாடல்களோ அல்லது நடனமோ இருக்க கூடாது.
எந்த அரசியல் கட்சி அல்லது மதத்துக்கும் ஆதரவாக எதிராகவோ பேனர்கள் வைக்க கூடாது.
ஜாதி அடிப்படையில் எந்த பாகுபாடும் இருக்கக் கூடாது. ஆடல், பாடல் நிகழ்ச்சியில் பங்கேற்பவர்கள் குட்கா பொருட்களையோ , மதுபானத்தையோ உட்கொள்ளக் கூடாது. பொது மக்களுக்கு அல்லது போக்குவரத்திற்கு எந்தவித இடையூறும் ஏற்படுத்தக் கூடாது.
இரவு 7 மணி முதல் 10 மணி வரை மட்டுமே நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும் என்று கடுமையான நிபந்தனைகளை விதித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கலை.ரா