உணவுக்கும் உபசரிப்புக்கும் புகழ்பெற்ற செட்டிநாட்டில் ரசம் போல் இருக்கும் நாட்டுக்கோழி தண்ணிக்குழம்பும் பிரபலம்.
தொண்டையை இதமாக்கும் இந்த நாட்டுக்கோழி தண்ணிக்குழம்பை நீங்களும் செய்து அசத்தலாம். வீட்டில் உள்ளவர்களுக்கு விருந்து படைக்கலாம்.
என்ன தேவை?
நாட்டுக்கோழி – அரை கிலோ
சின்ன வெங்காயம் – 150 கிராம்
தக்காளி – ஒன்று
கறிக் குழம்புத்தூள் – 2 டேபிள்ஸ்பூன்
மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டேபிள்ஸ்பூன்
மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்
இஞ்சி – பூண்டு விழுது – 2 டீஸ்பூன்
கரம் மசாலாத்தூள் – கால் டீஸ்பூன்
பட்டை, கிராம்பு, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
தேங்காய்த் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்
சோம்பு – ஒன்றரை டீஸ்பூன்
நல்லெண்ணெய் – ஒன்றரை டேபிள்ஸ்பூன்
விளக்கெண்ணெய் – 2 டீஸ்பூன்
உப்பு – தேவைக்கேற்ப
எப்படிச் செய்வது?
சிக்கனைச் சுத்தம் செய்து அலசி வைக்கவும். தேங்காய்த் துருவலில் பால் எடுக்கவும். வெங்காயம் 50 கிராம், ஒரு தக்காளியை நறுக்கி வைக்கவும். பிறகு, வாணலியில் விளக்கெண்ணெய் ஊற்றிச் சூடாக்கி, தோல் நீக்கிய சின்ன வெங்காயம் 100 கிராம், சோம்பு ஒரு டீஸ்பூன் சேர்த்து நன்றாக வதக்கவும்.
வெங்காயம் நன்கு நிறம் மாறியதும் தீயைக் குறைத்து கறிக் குழம்புத்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்), மஞ்சள்தூள் சேர்த்துக் கிளறவும். பிறகு, ஒரு நிமிடத்தில் அடுப்பை அணைத்து இந்தக் கலவை ஆறியதும் மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.
குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி பட்டை, கிராம்பு, அரை டீஸ்பூன் சோம்பு, கறிவேப்பிலை தாளித்து… சின்ன வெங்காயம், தக்காளி சேர்த்து, இஞ்சி – பூண்டு விழுது, மஞ்சள்தூள் சேர்த்து வதக்கவும். இதனுடன் சிக்கன் சேர்த்து 5 நிமிடங்கள் நன்கு வதக்கவும்.
பிறகு, அரைத்து வைத்துள்ள வெங்காயக் கலவை, தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, உப்பு போட்டு, கரம் மசாலாத்தூள் சேர்த்து குக்கரை மூடி, வெயிட் போட்டு கறி வேகும் அளவு விசில் விட்டு அடுப்பை அணைக்கவும்.
ஆவி விட்டதும், குக்கரைத் திறந்து தேங்காய்ப்பால் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கி, கொத்தமல்லித்தழை தூவவும்.
தண்ணிக்குழம்பு என்பதால் குழம்பு கெட்டிப்பட விடக்கூடாது. காரம் பார்த்துவிட்டு கறிக் குழம்புத்தூள் தேவைப்பட்டால் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
கறிக் குழம்புத்தூள் தயாரிப்பு முறை…
என்ன தேவை?
மல்லி (தனியா) – ஒரு கிலோ
காய்ந்த மிளகாய் – 600 கிராம்
சீரகம் – 100 கிராம்
காய்ந்த கறிவேப்பிலை – ஒரு கைப்பிடி அளவு
விரலி மஞ்சள் – 50 கிராம்
எப்படிச் செய்வது?
மிளகாயை நன்கு காயவைக்கவும். மீதி பொருள்களை வறுத்து மிளகாயுடன் சேர்த்து ஒன்றிரண்டாகத் தட்டிய விரலி மஞ்சளைச் சேர்த்து மெஷினில் அரைத்து வைத்துக்கொண்டால்… மட்டன், சிக்கன் மற்றும் மசால் வகைகளுக்குப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கிச்சன் கீர்த்தனா : மலாய் டங்ரி கபாப்