கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை இன்று (ஜூன் 22) காலை நிலவரப்படி 54 ஆக அதிகரித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரத்தில் கடந்த 19ஆம் தேதி விற்பனை செய்யப்பட்ட கள்ளச்சாராயத்தை வாங்கி குடித்து 150க்கும் அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மெத்தனால் கலந்த சாராயத்தை குடித்த அனைவரும் கடுமையாக உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையில் கள்ளக்குறிச்சி, புதுச்சேரி, சேலம் அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
கடந்த இரண்டு நாட்களாக அடுத்தடுத்து பலர் உயிரிழந்த நிலையில் நேற்று இரவு வரை மொத்தம் 51 பேர் பலியாகி இருந்தனர்.
இந்நிலையில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பரமசிவம், கல்யாண சுந்தரம் உள்பட 3 பேர் இன்று அதிகாலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் கள்ளச்சாராய பலி எண்ணிக்கை 54 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் தற்போதைய நிலையில் கள்ளக்குறிச்சியில் 91 பேர், சேலத்தில் 31 பேர், ஜிப்மரில் 17 பேர், விழுப்புரத்தில் 2 பேர் என மொத்தம் 141 பேர் தொடர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதில் பலர் இன்னும் தீவிர சிகிச்சை பிரிவில் இருப்பதால், அவர்களின் உடல்நிலையை மருத்துவர்கள் உன்னிப்பாக கவனித்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.
கள்ளச்சாராய விவகாரத்தில் மாவட்ட ஆட்சியர் முதல் கடைநிலை போலீசார் வரை தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், இதுவரை முக்கிய குற்றவாளிகளான கண்ணுக்குட்டி, சின்னதுரை உட்பட 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிறிஸ்டோபர் ஜெமா
டாப் 10 நியூஸ் : பாஜக ஆர்ப்பாட்டம் முதல் நடிகர் விஜய் பிறந்தநாள் வரை!