கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்கள் குறித்து விசாரணை மேற்கொள்ள ஒரு நபர் ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூன் 20) உத்தரவிட்டுள்ளார்.
கள்ளச்சாராய மரணம்
கள்ளக்குறிச்சி அருகே உள்ள கருணாபுரம் காலனியை சேர்ந்த பலர் வாந்தி, வயிற்று வலி, வயிற்றெரிச்சல் போன்ற உடல் உபாதைகளால் கள்ளக்குறிச்சி மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கடந்த ஜூன் 18ஆம் தேதி அனுமதிக்கப்பட்டனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் இதுவரை 5 பெண்கள் உட்பட 35 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் கள்ளக்குறிச்சி, விழுப்புரம், சேலம், புதுச்சேரி மருத்துவமனைகளில் கள்ளச்சாராயம் குடித்த 70க்கும் மேற்பட்டவர்கள் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் மெத்தனால் கலந்த சாராயம் அருந்தியது காவல்துறையினர் நடத்திய விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது.
விசாரணையில், சாராய வியாபாரி கோவிந்தராஜ், மனைவி ரேவதி, தாய் ஜோதி, சகோதரர் தாமோதர் உட்பட 10 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
இவர்களின் மீது கொலை அல்லாத மரணம் உட்பட 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இவர்களிடம் இருந்து 900 லிட்டர் மெத்தனால் விஷ சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளி சின்னத்துரையை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.
ஒரு நபர் ஆணையம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் இன்று (ஜூன் 20) தலைமைச் செயலகத்தில் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடி, மா.சுப்பிரமணியன், டிஜிபி சங்கர் ஜிவால், உள்துறை செயலாளர் அமுதா, மருத்துவத்துறை செயலாளர் ககன்தீப் சிங் மற்றும் பல உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
ஆலோசனையின் முடிவில், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி கோகுல்தாஸ் தலைமையில் ஒரு நபர் ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆணையம் 3 மாதங்களுக்குள் விசாரணை நடத்தி முழு அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.10 லட்சமும், சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ரூ.50 ஆயிரமும் நிவாரணமாக வழங்கவும் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
இந்து
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
’கள்ளச்சாராயம்… காவல் துறையின் சில கருப்பு ஆடுகளால் தடுக்க முடியவில்லை’ : வைகோ