திருச்சி இளைஞர் மரணம் எச்3என்2 காரணமா?: கொரோனா காரணமா?

தமிழகம்

திருச்சி இளைஞரின் மரணத்திற்குக் காரணம் எச்3என்2 வைரஸ் காய்ச்சலா என்பது சோதனை முடிவிற்குப் பிறகு தெரிய வரும் என்று மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில் எச்3என்2 இன்புளூயன்சா காய்ச்சலும் பரவி வருகிறது.

இந்நிலையில், திருச்சியை சேர்ந்த உதயகுமார் (27) என்ற இளைஞர் நேற்று (மார்ச் 12) காய்ச்சல் காரணமாக உயிரிழந்தார்.

இவரது மரணம் தொடர்பாக இன்று சென்னையில் (மார்ச் 13) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, “கொரோனா பாதிப்பு என்பது மிகப்பெரிய அளவில் குறைந்தது. ஒரு நாளுக்கு 2 பேருக்குத்தான் பாதிப்பு என்ற நிலைக்கு குறைந்திருந்தது. தற்போது இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.

நேற்று ஒருநாளில் மட்டும் கிட்டத்தட்ட 500 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக ஒன்றிய அரசின் சுகாதாரத்துறை அறிவிப்பு வெளியிட்டிருந்தது.

கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் நாம் முறையான எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இன்புளூயன்சா எச்3என்2 வைரஸ் பாதிப்பும் அதிகரித்து வருவதால் தமிழகத்தில் மார்ச் 11 ஆம் தேதி 1,000 இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டு 1,586 இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்பட்டது.

இந்த மருத்துவ முகாம் மூலம் 2,603 பேருக்கு காய்ச்சல் பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

அவர்களுக்குச் சிகிச்சை அளித்ததோடு மட்டுமில்லாமல் அவர்கள் வீடுகளில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஐசிஎம்ஆர் அறிக்கையில், கொரோனா காலத்தில் கடைப்பிடிக்கப்பட்ட விதிமுறைகளை மீண்டும் கடைப்பிடிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டம் அதிகமாகக் கூடும் இடங்களில் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிப்பது போன்றவற்றை தமிழக சுகாதாரத்துறை சார்பிலும் தொடர்ந்து அறிவுறுத்தி வருகிறோம்.

திருச்சியை சேர்ந்த 27 வயது இளைஞர் பெங்களூருவில் வசித்து வந்தவர். அவர் சமீபத்தில் கோவா சென்று திரும்பிய நிலையில் உடல்நலம் பாதிக்கப்பட்டதால் மீண்டும் திருச்சிக்கே வந்துள்ளார்.

அவர் மோசமான உடல்நிலையோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தான் உயிரிழந்துள்ளார்.

அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் எச்3என்2 பாதிப்பு இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ள அவருடைய மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

எச்3என்2 வைரஸால் இந்தியாவில் இரண்டு பேர் உயிரிழந்துள்ளார்கள். ஆனால் ஆய்வகத்தில் இருந்து சோதனை முடிவுகள் வந்தால் தான் திருச்சி இளைஞருடைய மரணத்திற்கான காரணம் தெரியவரும்.

புளூ காய்ச்சலுக்கான தடுப்பூசி போடவேண்டிய அவசியம் தமிழகத்தில் இல்லை. தடுப்பூசி போடுவது குறித்து ஒன்றிய அரசு சார்பில் அனுமதியும் தடுப்பூசியும் வழங்கப்படும். அப்போது தடுப்பூசி போடப்படும்” என்று பேசினார்.

மோனிஷா

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்: ஃபைனலில் இந்தியா மாஸ் என்ட்ரி!

சீமானை விடமாட்டோம்: பிரசாந்த் கிஷோருக்கு ‘ரிப்போர்ட்’ கொடுத்த ஈரோடு போலீஸ்

+1
0
+1
0
+1
0
+1
1
+1
1
+1
0
+1
0

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *