2019ஆம் ஆண்டில் பரவத் தொடங்கி இன்றளவும் உலகை ஆட்டிப்படைத்து வருகிறது இந்த கொடிய கொரோனா வைரஸ்.
2019 டிசம்பர் 31ஆம் தேதி சீனாவில் பரவத் தொடங்கியது கொரோனா வைரஸ். மிக வேகமாக மற்ற நாடுகளிலும் பரவியது. இதனால் ஜனவரி 31, 2020 அன்று உலக சுகாதார நிறுவனம் மருத்துவ அவசரகால நிலையை அறிவித்தது.
3 ஆண்டுகளை கடந்துவிட்ட நிலையிலும் இன்றளவும் மக்களை அச்சுறுத்தி வருகிறது கொரோனா.
இந்நிலையில், தொற்று பாதித்த நபர் ஒருவர் சென்னை மாநகர பேருந்தில் பயணித்தால் அவரிடம் இருந்து 9 பேருக்கு கொரோனா பரவும் என அதிர்ச்சி ஆய்வு தகவல்கள் வெளியாகியுள்ளது.
சென்னையில் 31 டிப்போக்கள் மூலம் 600க்கும் மேற்பட்ட வழித்தடங்களில் 3400க்கும் அதிகமான மாநகர பேருந்துகள் சென்னை மாநகர போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படுகின்றன. இந்த பேருந்துகளில் தினசரி ஏறத்தாழ 30 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். சென்னை மக்களின் மிக முக்கிய போக்குவரத்துகளில் ஒன்றாக மாநகர பேருந்துகள் உள்ளன.
அலுவலகம் செல்வோர், பள்ளி கல்லூரிகளுக்கு செல்வோர் என பலரும் மாநகர பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். இதனால் காலை மாலை நேரங்களில் கூட்டம் நிறைந்ததாகவே மாநகர பேருந்துகள் காணப்படும்.
இப்படி மக்கள் அதிகம் பயன்படுத்தும் தாம்பரம் முதல் பிராட்வே வரை இயக்கப்படும் 21ஜி மாநகர பேருந்தில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
நாளொன்றுக்கு 72 ட்ரிப்கள் 21ஜி எண் கொண்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மொத்தம் 41 பேருந்து நிறுத்தங்களில் 21ஜி பேருந்துகள் நின்று செல்லும். இதனை பொதுமக்கள் மட்டுமின்றி அண்ணா பல்கலை, செல்லம்மாள் கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் மற்றும் அலுவலகங்களுக்கு செல்வோர் என பல தரப்பினரும் பயன்படுத்துகின்றனர்.
இந்த பேருந்தில் தான் அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் புதுச்சேரியை தளமாகக் கொண்ட ஐசிஎம்ஆர் வெக்டர் கட்டுப்பாட்டு ஆராய்ச்சி மைய ஆராய்ச்சியாளர்கள் இந்த ஆய்வை நடத்தியுள்ளனர்.
ஒரு ட்ரிப்புக்கு 36.1 கிலோமீட்டர் இயக்கப்படும் இந்த பேருந்தில் ஒவ்வொரு நிறுத்தத்திலும் 5 பேர் ஏறுவார்கள் அல்லது இறங்குவார்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதியுள்ளனர். ஆனால் எல்லா நேரங்களிலும் 20 பேராவது பேருந்தில் இருந்துள்ளனர். இப்படி பாதி நிரம்பிய பேருந்து கொரோனா பாதித்த ஒருவருடன் ஒவ்வொரு நிலையத்திலும் நின்று செல்லும் போது 9 பேருக்கு தொற்று ஏற்படலாம் என்று தெரியவந்திருக்கிறது.
பேருந்தில் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அதிகமாக இருந்தாலோ அல்லது பயணிகள் அதிக தூரம் பயணித்தாலோ அல்லது அதிக கூட்டம் இருந்தாலோ இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் ஆய்வு முடிவுகள் கூறுகின்றன.
ஆர்ஓ குறியீடு மூலம் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இனப்பெருக்க எண் என சொல்லப்படும் ஆர்ஓ குறியீடு என்பது தொற்று உள்ள நபரிடமிருந்து மற்றவர்களுக்கு வைரஸ் தொற்று பரவும் விகிதம் ஆகும்.
21ஜி பேருந்தை பொறுத்தவரை பயணத்தின் காலம், ஒவ்வொரு பேருந்து நிறுத்தத்திலும் உள்ள நேரம், மொத்த பயணிகளின் எண்ணிக்கை ஆகியவற்றைக் கொண்டு ஆர்ஓ குறியீடு மதிப்பிடப்பட்டுள்ளது.
அதன்படி இந்த பேருந்தின் பயணத்தின் முடிவில் ஆர்ஓ மதிப்பு 1.04 ஆக இருந்தது என அண்ணா பல்கலைக்கழகத்தின் இன்ஸ்ட்ரூமென்டேஷன் இன்ஜினியரிங் துறை உதவிப் பேராசிரியர் கமலானந்த் கிருஷ்ணமூர்த்தி கூறியுள்ளார்.
எனவே தொற்றுநோய் அபாயத்தை குறைக்க மக்கள் மாஸ்க் அணிந்து, சமூக இடையவெளியை கடைப்பிடித்து பாதுகாப்பாக பயணிக்க வேண்டும் என்று ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.
ஏற்கனவே இந்தியாவில் கடந்த 4 மாதங்களைக் காட்டிலும் தற்போது தொற்று பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக ஒமிக்ரான் வகை திரிபான எக்ஸ்பிபி 1.16, 7க்கும் மேற்பட்ட மாநிலங்களில் பரவியிருக்கிறது.
நாடு முழுவதும் கடந்த 24 மணி நேரத்தில் 1,573 பேருக்கு புதிதாக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தினசரி கொரோனா பரவல் விகிதம் 1.30 சதவிகிதமாகவும், வாராந்திர கொரோனா பரவல் விகிதம் 1.47 சதவிகிதமாகவும் உள்ளது.
மீண்டும் உயிரிழப்பும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. நேற்று மகாராஷ்டிராவில் மட்டும் 3 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். உத்தரப் பிரதேசம், கேரளாவிலும் கொரோனாவுக்கு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் உயிரிழப்பு இல்லை என்றாலும் கொரோனா பரவல் அதிகரித்துள்ளது. சென்னையில் 31 பேர் உட்பட மாநிலத்தில் மொத்தம் 105 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 25க்கும் அதிகமான மாவட்டங்களில் தொற்று பரவியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
பிரியா
தங்கம் விலை உயர்வு: இன்றைய நிலவரம்!
மெஸ்ஸியின் அடுத்த புதிய சாதனை!