”தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை” என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரித்துள்ளார்.
சீனாவில் தற்போது கொரோனா தொற்று அதிகரித்து வருவது இந்தியர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
தவிர, புத்தாண்டிற்கு பிறகு சீனாவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது அலைகள் வேகமெடுக்கும் என்றும் அப்போது 15 லட்சத்திற்கு அதிகமானோர் கொரோனா தொற்றால் உயிரிழக்கக்கூடும் என்றும் சீனாவில் உள்ள மருத்துவ வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
கொரோனா பரவல்
இதனால் உலக நாடுகள் அனைத்தும் மீண்டும் அச்சத்தில் ஆழ்ந்துள்ளன. கடந்த நவம்பர் 2-ஆம் தேதி முதல் ஆசியா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று அதிகரித்து வருவதாக வேர்லோடோ அமைப்பு தெரிவித்துள்ளது.
ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் மீண்டும் கொரானா பாதிப்பு அதிகரித்துள்ளது. இருப்பினும் இந்தியாவில் கடந்த 5 மாதங்களாக கொரோனா தொற்று எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது.

அதேநேரத்தில், இந்தியாவில் கொரோனா பரிசோதனைக்காக எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகளில் மேலும் தீவிரம் காட்டுமாறு மத்திய அரசு மாநில அரசுகளுக்கு வலியுறுத்தி உள்ளது.
மேலும், கொரோனா பாதித்தவரின் ரத்த மாதிரிகளை மாநிலங்கள் மரபணு ஆய்வகத்திற்கு தினசரி அனுப்ப வேண்டும் என அனைத்து மாநில தலைமைச் செயலாளர்களுக்கும், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூசன் கடிதம் எழுதி உள்ளார்.
உறுதியான நடவடிக்கை தேவை
இந்த நிலையில், ”தமிழகத்தில் கொரோனா பரவுவதை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை” என பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தெரித்துள்ளார்.
இதுகுறித்து அவர், இன்று தன்னுடைய ட்விட்டர் பதிவில்,
“உலகின் பல நாடுகளில் கொரோனா மீண்டும் வேகமாக பரவத் தொடங்கியுள்ளது.
நேற்று ஒரு நாளில் ஜப்பானில் 1.85 லட்சம், கொரியாவில் 87,559, பிரான்சில் 71,212, ஜெர்மனியில் 52,528 உட்பட உலகம் முழுவதும் 5,59,018 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா புதிய அலை கவலையளிக்கிறது.
கடந்த காலங்களில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட மாநிலம் தமிழ்நாடு.
அதனால் புதிய அலை இந்தியாவில், குறிப்பாக தமிழகத்தில் பரவுவதை தடுக்க உறுதியான நடவடிக்கைகள் தேவை.
முதல் நடவடிக்கையாக வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளுக்கு சோதனை நடத்தப்பட வேண்டும்.

தமிழகத்தில் 18 வயதைக் கடந்த 4.30 கோடி பேரில் 87 லட்சம், அதாவது 20.23% மட்டுமே பூஸ்டர் டோஸ் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மீதமுள்ள மூன்றரை கோடி பேருக்கு பூஸ்டர் டோஸ் போட சிறப்பு முகாம்கள் நடத்தப்பட வேண்டும். அவற்றை மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும்.
பொது இடங்களில் முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்க வேண்டும். பொதுமக்களும் தங்கள் பங்குக்கு கொரோனா பாதுகாப்பு விதிகளை கடைபிடிக்க வேண்டும். அதன் மூலம் கொரோனா பரவலையும், அதன் ஆபத்தான விளைவுகளையும் தடுத்து நிறுத்த ஒத்துழைக்க வேண்டும்” என அதில் தெரிவித்துள்ளார்.
ஜெ.பிரகாஷ்
மின் இணைப்புடன் ஆதாரை இணைக்க தடையில்லை: உயர்நீதிமன்றம்
கடலூர் பனைமரம் அழிப்பு: கூடுதல் மரங்கள் நட அன்புமணி வலியுறுத்தல்!