BF.7 உருமாறிய வைரஸ், சீனாவில் வேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில் மருத்துவ கட்டமைப்புகளை தயார் செய்யும் பணிகள் துவங்கியுள்ளன.
முதற்கட்டமாக, சென்னை அரசு ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை வழங்குவது தொடர்பான ஒத்திகை நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் இந்நிகழ்ச்சியை நேரில் பார்வையிட்டு, செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகள், மாவட்ட அரசு மருத்துவமனைகள், வட்டார மருத்துவமனைகள் என அனைத்து மருத்துவமனைகளிலும் கோவிட் வந்தால் எதிர்கொள்வது தொடர்பான வழிமுறைகளை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு அறிவுறுத்தல் விடப்படுகிறது.
ஒவ்வொரு மருத்துவமனையின் பொறுப்பு அதிகாரிகள், ஆக்ஸிஜன், படுக்கைகள் உள்ளிட்ட பல்வேறு வசதிகள் குறித்து அந்த மருத்துவமனைகளை ஆய்வுசெய்யவேண்டும்.
கொரோனா பாதிப்பின்போது எந்த மருந்துகள் அதிகம் தேவைப்பட்டதோ அவற்றின் கையிருப்பு ஆய்வு செய்யப்பட்டு உறுதி செய்யப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் மருந்துகள் இருப்பு பற்றி ஆய்வு செய்து தலைமைக்கு தகவல் தெரிவிக்கவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை பாதிப்பு எண்ணிக்கை என்பது கடந்த 20 நாட்களாக 10க்கும் கீழ் உள்ளது. மொத்தமாக 51 பேர்தான் கொரோனாவுக்காக சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
பிஎப் 7 என்ற கொரோனா வைரசின் உள் உருமாற்றம் பல நாடுகளில் அதிகரித்து வருகிறது. மாதிரிகள் பகுப்பாய்வு செய்யும் வசதி தமிழ்நாட்டிலேயே உள்ளது என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் பேசினார்.
கலை.ரா
அடர் பனியில் உறைந்த வட மாநிலங்கள்!
ஐபிஎல் ஏலம்: நொந்து போன சந்தீப் ஷர்மா