கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ள நிலையில் தமிழகத்தில் மூன்றாவது நாளாக நேற்று (ஏப்ரல் 12) ஒருவர் உயிரிழந்துள்ளார்.
2019ஆம் ஆண்டு பரவத் தொடங்கி உலகம் முழுவதும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ் பரவல் குறைந்திருந்த நிலையில் மீண்டும் கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
இதனால் மருத்துவமனைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மத்திய அரசு, மாநில அரசுகளை கேட்டுக் கொண்டுள்ளது
இந்திய அளவில் கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு நேற்று 7,830 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாடு முழுவதும் 40,215 பேர் இந்த வைரஸ் தொற்றுக்கு பாதிப்புக்குள்ளாகி மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
தமிழ்நாடு, குஜராத், ஹரியானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தை பொறுத்தவரை நேற்று 432 பேர் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் அதிகபட்சமாக 117 பேரும், கோவையில் 46 பேரும், செங்கல்பட்டில் 40 பேரும், கன்னியாகுமரியில் 27 பேரும், சேலத்தில் 17 பேரும், ராணிப்பேட்டையில் 16 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி சென்னையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 96 வயது முதியவர் நேற்று உயிரிழந்துள்ளார். அவருக்கு நிமோனியா உள்ளிட்ட இணை நோய் பாதிப்பு இருந்ததாகவும் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
முன்னதாக செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏப்ரல் 10ஆம் தேதி ஒருவரும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏப்ரல் 11ஆம் தேதி ஒருவரும் உயிரிழந்த நிலையில் மூன்றாவது நாளாக நேற்று ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் தமிழகத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 38, 053 ஆக அதிகரித்துள்ளது.
பிரியா
வேலைவாய்ப்பு : தமிழ்நாடு சிறைதுறையில் பணி!
கழிவறை கிண்ணங்களை திருடிய ரஷ்ய வீரர்கள்: உக்ரைன் அமைச்சர்!