தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் அதிகரித்து வருவதாகவும், எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தமிழக சுகாதாரத் துறைக்குக் கடிதம் எழுதியிருக்கிறது.
கொரோனா பரவல் மீண்டும் இந்தியா முழுவதும் அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 11,692 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் 28 பேர் உயிரிழந்திருப்பதாகவும் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த 28 பேரில் 9 பேர் கேரளாவைச் சேர்ந்தவர்கள். தமிழகத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
நாட்டில் மொத்தமாக கொரோனா பாதிப்புக்குச் சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை, 66,170ஆக அதிகரித்துள்ளது.
இவ்வாறு பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் இன்று (ஏப்ரல் 21) உத்தரப் பிரதேசம், தமிழ்நாடு, ராஜஸ்தான், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா, ஹரியானா மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்று எழுதியுள்ளார்.
கொரோனா தொற்று இன்னும் முடிவுக்கு வரவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ள இந்த கடிதத்தில், “கொரோனா பரவல் கண்காணிப்பு மற்றும் கட்டுப்படுத்தும் பணியைத் தீவிரப்படுத்த வேண்டும். எந்தநிலையிலும் கவனக்குறைவாக இருக்கக்கூடாது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு விகிதம் தேசிய சராசரியை விட அதிகமாக இருக்கிறது. இந்தியஅளவில் பாதிப்பு விகிதம் 5.5 சதவிகிதமாக இருக்கிறது. தமிழ்நாட்டில் 6 சதவிகிதமாக இருக்கிறது.
எனவே நோய்த் தடுப்பு நடவடிக்கையில் தீவிரம் காட்ட வேண்டும். பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.
பிரியா
12 மணி நேர வேலை : மாத்தி மாத்தி பேசும் ஸ்டாலின்
புல்வாமா தாக்குதல்: “மத்திய அரசு கடமை தவறிவிட்டது”: சரத்பவார்