கொரோனா குமார் படத்திற்காக நடிகர் சிம்புவுக்கு வழங்கப்பட்ட முன்பணம் ரூ.1 கோடியை திருப்பி செலுத்தக்கோரி வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் தொடர்ந்த வழக்கில் நடிகர் சிம்பு பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.
நடிகர் சிம்புவை கதாநாயகனாக வைத்து கொரோனா குமார் படத்தை தயாரிக்க வேல்ஸ் பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
இதற்காக 2021-ஆம் ஆண்டு சிம்புவுக்கு தயாரிப்பு நிறுவனம் சார்பில் ரூ.9.5 கோடி சம்பளம் பேசப்பட்டு, ரூ.4.5 கோடி அட்வான்ஸ் தொகை கொடுக்கப்பட்டதாகவும், படத்தை முடித்து கொடுக்காததால் மற்ற படங்களில் நடிக்க சிம்புவுக்கு தடை விதிக்க உத்தரவிட வேண்டும் என்றும் வேல்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. முன்பணமாக கொடுத்த ரூ.4.5 கோடி ரூபாயை நடிகர் சிம்பு திருப்பி செலுத்த வேண்டும் என்று மனுவில் கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பு விசாரணைக்கு வந்தபோது நடிகர் சிம்பு வேல்ஸ் நிறுவனம் இடையே போடப்பட்ட ஒப்பந்தம் சமர்ப்பிக்கப்பட்டது. ஒப்பந்தத்தில் ரூ.1 கோடி மட்டுமே சிம்புவுக்கு வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. இதனை தொடர்ந்து ஒப்பந்தத்தில் உள்ளபடி ரூ.1 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்த சிம்புவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதி அப்துல் குத்தூஸ் முன்பாக விசாரணைக்கு வந்தது.
அப்போது சிம்பு தரப்பில் வழக்கறிஞர் சுப்பிரமணியன் ஆஜராகி, “2021-ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஒப்பந்தம் போடப்பட்டது. ஒப்பந்தம் போடப்பட்ட ஓராண்டிற்குள் படத்தை எடுத்து முடிக்காவிட்டால் அந்த தொகையை திருப்பி செலுத்த தேவையில்லை. ஒப்பந்தம் காலாவதியாகிவிட்டது. சிம்பு மீது தவறு இல்லாததால் ரூ.1 கோடியை திருப்பி செலுத்த தேவையில்லை” என்ற வாதம் முன்வைக்கப்பட்டது.
சிம்புவின் பதில் மனுவிற்கு பதிலளிக்க வேல்ஸ் நிறுவனம் சார்பில் அவகாசம் கோரப்பட்டது. சிம்பு தரப்பின் வாதத்தை பதிவு செய்துகொண்ட நீதிபதி வழக்கின் விசாரணையை அக்டோபர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளார்.
செல்வம்
நீட் தேர்வு எப்போது? -வெளியான அறிவிப்பு!
உடைந்த கூட்டணி: போஸ்டர் ஒட்டி மோதும் அதிமுக – பாஜகவினர்!