தமிழகத்தில் H3N2 காய்ச்சல் பரவி வரும் நிலையில், கொரோனா பரவலும் அதிகரித்து வருவதாக தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
கடந்த சில நாட்களாகத் தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் H3N2 காய்ச்சல் பரவி வருகிறது. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அறிவுறுத்தியது.
அதன்படி தமிழகம் முழுவதும் இன்று 1000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
சென்னை சைதாப்பேட்டையில் காய்ச்சல் முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.
அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “ இந்த காய்ச்சலிலிருந்து மக்களைக் காப்பதற்கு உண்டான நடவடிக்கைகளைச் சுகாதாரத் துறை மேற்கொண்டுள்ளது. சென்னையில் 200 வார்டுகளிலும் 200 முகாம்கள் நடத்தப்படுகிறது. அதுபோன்று 1000 இடங்கள் என்று சொன்னாலும், இன்று 1200 இடங்களில் முகாம்கள் நடத்தப்படுகின்றன.
எல்லா மருத்துவமனைகளிலும் தேவையான மருந்துகள் கையிருப்பில் இருக்கிறது. தொண்டை வலி, உடல் வலி, தலை வலி ஆகிய பாதிப்புகள் இந்த காய்ச்சலின் போது ஏற்படும்.
இந்த காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்கள் 3,4 நாட்கள் வீட்டில் தனிமையாக இருந்து ஓய்வெடுத்துக்கொண்டால் இதை குணப்படுத்திக்கொள்ள முடியும்.
தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டுமென சொல்லக் காரணம், பாதிக்கப்படுபவர்கள் வெளியே வந்தால் அவர்கள் இருமும் போது அந்த பாதிப்பு மற்றவர்களுக்குப் பரவிவிடும். அதனால் தான் தனிமைப்படுத்திக் கொள்ள அறிவுறுத்துகிறோம்.
தனிமனித இடைவெளியைக் கடைப்பிடித்தல், பொது இடங்களில் மாஸ்க் அணிதல் ஆகியவற்றைப் பின்பற்ற வேண்டும் என்று ஐசிஎம்ஆர் அறிவுறுத்தியுள்ளது” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “கொரோனா பாதிப்பு சில நாட்களாகக் கூடி கொண்டிருக்கிறது. இந்திய அளவில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது.
ஒமைக்ரான் வகை கொரோனா அதிகரித்தாலும் அதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுவதில்லை. இதனால் பதட்டம் கொள்ளத் தேவையில்லை. ஆர்டிபிஆர் பரிசோதனை கூடுதலாக மேற்கொள்ளப்படுவதால் இந்த எண்ணிக்கை அதிகரிக்கலாம் எனக் கருதுகிறோம்.
2020 மார்ச் மாதத்துக்குப் பிறகு 2 என்ற எண்ணிக்கையில் கடந்த மாதம் கொரோனா பரவல் குறைந்தது. அது தற்போது 20-25 என்ற அளவில் அதிகரித்திருக்கிறது” எனக் கூறினார்.
பிரியா