தமிழ்நாட்டில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுவிட்டதாக மத்திய சுகாதார அமைச்சரிடம் தமிழக சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளில் கொரோனா தொற்று பரவி வருவதை தொடர்ந்து அதனை இந்தியாவில் தடுக்கும் வகையில் மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மான் சுக் மாண்டவியா அனைத்து மாநில சுகாதாரத்துறை அமைச்சர்களுடன் இன்று(டிசம்பர் 23)வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் பேசினார்.
பல்வேறு பணிகளுக்காக நாகர்கோவில் சென்றுள்ள தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் அங்கிருந்தே ஆலோசனையில் கலந்துகொண்டார்.
வீடியோ கான்ஃபரன்ஸ் மூலம் மத்திய அமைச்சரிடம் பேசிய அவர், “சீனா, ஹாங்காங், ஜப்பான், பிரேசில், அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் தற்போதைய கொரோனா நிலை மற்றும் முன்னெச்சரிக்கை குறித்து விவாதிக்க தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையில் கடந்த 21ம் தேதி அன்று உயர்நிலைக் குழுக் கூட்டம் நடத்தப்பட்டது.
அனைத்து முக்கிய துறைகளின் உயர் அதிகாரிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். தமிழகத்தில் கொரோனா தொடர்பாக தினசரி கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
புதிய மாறுபாடுகளைக் கண்டறியவும் தேவையான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை எடுக்கவும் அனைத்து நேர்மறை மாதிரிகளும் முழு மரபணு வரிசைமுறைக்கு அனுப்பப்படுகின்றன.
வெளிநாட்டிலிருந்து வரும் அனைத்து பயணிகளின் உடல் வெப்பநிலை தமிழ்நாட்டில் உள்ள 4 நிலையங்களில் (சென்னை, மதுரை, திருச்சி மற்றும் கோயம்புத்தூர்) சர்வதேச முனையங்களில் பரிசோதிக்கப்படுகிறது.
உடல் வெப்பநிலை அதிகமாக இருந்தால் அவர்கள் பரிசோதிக்கப்பட்டு கண்காணிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்திய அரசு 24.12.2022 முதல் சீரற்ற மாதிரி சோதனையைத் தொடங்குகிறது, ஆனால் தமிழகத்தில் இன்று (23.12.2022) முதல் சீரற்ற மாதிரி சோதனையைத் தொடங்கி உள்ளோம்.
விமான நிலைய அதிகாரிகள் மற்றும் மாவட்ட சுகாதார அதிகாரிகள் சோதனை மற்றும் பிற கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை ஒருங்கிணைந்து திறம்பட செய்ய அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.
கொரோனா பரவாமல் தடுக்கும் விதமாக பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு மக்களுக்கு அறிவுறுத்தி இருப்பதாக” மா.சுப்ரமணியன் கூறினார்.
கலை.ரா
எல்லைப் பிரச்சினை: கர்நாடகம்போல் களத்தில் இறங்கிய மராட்டியம்