தமிழகத்தில் குறைந்திருந்த கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்துள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்தே படிப்படியாக குறைந்தது. குறிப்பாக ஜனவரி 30 ஆம் தேதியில் இருந்து ஒரு இலக்க எண்ணில் தான் கொரோனா பாதிப்பு பதிவாகி வந்தது.
2019 ஆம் ஆண்டுக்கு பிறகு சமீபத்தில் தான் ‘2’ என்றளவுக்கு பாதிப்பு குறைந்ததாக சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் தமிழகத்தில் மீண்டும் பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. கடந்த நவம்பர் மத்தியில் பாதிப்பு 50க்கும் அதிகமாக இருந்த நிலையில், 3 மாதங்களுக்கு பிறகு மீண்டும் இன்று பாதிப்பு 50ஐ கடந்து பதிவாகியுள்ளது.
இன்று (மார்ச் 17) மொத்தம் 56 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தாய்லாந்து, கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்த தலா ஒருவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3,138 பேருக்கு இன்று ஆர்டிபிஆர் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. 36 பேர் சிகிச்சைக்கு பின் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். தமிழகத்தில் கொரோனாவுக்கு சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை 304ஆக உள்ளது. இன்று யாரும் கொரோனாவால் உயிரிழக்கவில்லை என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
சென்னையில் இன்று 12 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு, மொத்தம் 67 பேர் சிகிச்சையில் உள்ளனர். அதிகபட்சமாக கோவையில் 14 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு அங்கு 78 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
சேலத்தில் 4 பேருக்கும், திருப்பூர், செங்கல்பட்டில் தலா 3 பேருக்கும், கள்ளக்குறிச்சி, கிருஷ்ணகிரி, கன்னியாகுமரியில் தலா 2 பேருக்கும் இன்று தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுதவிர கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், காஞ்சிபுரம், மதுரை, மயிலாடுதுறை, நாமக்கல், திருவள்ளூர், திருச்சி, வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் தலா ஒருவருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. தமிழகத்தில் மொத்தம், 19 மாவட்டங்களில் தொற்று பாதிப்பு உள்ளது.
பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நேற்று மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷன் கடிதம் ஒன்று தமிழக சுகாதாரத் துறைக்கு அனுப்பினார்.
அதில், “மார்ச் 8, 2023 அன்று முடிவடைந்த வாரத்தில் தமிழ்நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 170-ஆக இருந்த நிலையில், மார்ச் 15, 2023 அன்று முடிவடைந்த வாரத்தில் அதன் எண்ணிக்கை 258-ஆக அதிகரித்துள்ளது. நாடு முழுவதும் அதே வாரத்தில் நோய்த்தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் சதவீதம் 0.61ஆக இருந்த நிலையில், தமிழ்நாட்டில் அது 1.99 சதவீதமாக உள்ளது.
எனவே, பரிசோதனை மேற்கொள்ளுதல், தடுப்பூசி செலுத்துதல் உள்ளிட்ட 5 பணிகளை தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்” என்று அறிவுறுத்தியுள்ளார்.
பிரியா
தமிழ்நாட்டிற்கு வர வேண்டிய நிதி குறைந்துக்கொண்டே செல்கிறது: பழனிவேல் தியாகராஜன்
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் எப்போது?: தேதி அறிவிப்பு!