கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 14) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடந்த 12 ஆம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் காரணமாக தன்னை வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டதாக முதல்வர் தெரிவித்திருந்தார். அவர் வெளியிட்டிருந்த ட்விட்டர் பதிவில், ”இன்று உடற்சோர்வு சற்று இருந்தது. பரிசோதித்ததில் கொரோனா உறுதிசெய்யப்பட்டதையடுத்து தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். அனைவரும் முகக்கவசம் அணிவதோடு, தடுப்பூசிகளைச் செலுத்திக் கொண்டு, பாதுகாப்பாய் இருப்போம்” எனத் தெரிவித்திருந்தார்.
அதனைதொடர்ந்து தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் முதல்வர் ஸ்டாலின் நலம் பெற்று பணிக்கு திரும்ப வேண்டும் என்று விருப்பம் தெரிவித்துவந்தனர். அடுத்த வாரம் டெல்லி சென்று பிரதமருக்கு ‘செஸ் ஒலிம்பியாட் 2022’ தொடருக்கான அழைப்பிதழை முதல்வர் ஸ்டாலின் நேரில் சந்தித்து கொடுக்க இருப்பதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில் இன்று தமிழக முதல்வருக்கு காவேரி மருத்துவமனையில் சிடி ஸ்கேன் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், கொரோனா தொற்று அறிகுறிகள் இன்னும் உள்ளது என்று உறுதி செய்யப்பட்ட நிலையில் சிகிச்சைக்காக அவர் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதில், கொரோனா அறிகுறிகள் தொடர்பான பரிசோதனைகள் நடைபெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
– கிறிஸ்டோபர் ஜெமா