ஒடிசாவில் ஏற்பட்ட ரயில் விபத்து தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை எழிலகத்தில் உள்ள வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அவசரக்கால செயல்பாட்டு மையத்தில் இருந்து இன்று (ஜூன் 3) செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் பேசுகையில்,
“ஒடிசா ரயில் விபத்தில் நமது மாநிலத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்ற தகவல் கிடைப்பதில் கால தாமதம் ஏற்படுகிறது.
தமிழகத்தில் இருந்து ஒரிய மொழி பேசக்கூடிய 2 டி.ஆர்.ஓ, 3 துணை ஆட்சியர்கள், 3 தாசில்தார்கள் என 8 பேர் கொண்ட குழுவை ஒடிசாவிற்கு அனுப்பி வைத்துள்ளோம்.
அவர்கள் அங்கு சென்று உயிரிழந்த மற்றும் காயமடைந்து சிகிச்சையில் இருப்பவர்களை கண்டறிந்து அவர்களது உறவினர்களை தொடர்பு கொண்டு தேவையான உதவிகளை செய்ய உள்ளார்கள்.
ஒடிசா அரசாங்கத்தை தொடர்பு கொண்டு தமிழ்நாட்டில் இருந்து மீட்புப் பணிக்காக குழுவை அனுப்புகிறோம் என்று கேட்டதற்கு, எங்களது மாநிலத்தின் மீட்புப் படையினரே போதுமான அளவிற்கு இருக்கிறார்கள். தேவை இருந்தால் சொல்கிறோம் என்று சொல்லியுள்ளார்கள்.
விபத்து நடந்த இடத்தில் மீட்புப் பணிகள் முடிவடையும் நிலையில் தான் எத்தனை பேர் இறந்துள்ளார்கள் என்பது தெரியவரும்.
அதில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் எத்தனை பேர் என்பதும் அப்போது தான் தெரிய வரும். இரண்டு நாட்களுக்கு கட்டுப்பாட்டு அறையில் இருந்து பணிகளை கண்காணிக்க உள்ளோம்.
விபத்து நடந்த இடத்தில் இருந்து 8 பேர் தொடர்பு கொண்டு பேசியுள்ளார்கள். கட்டுப்பாட்டு அறையில் இருந்து நாங்கள், கோரமண்டல் ரயிலில் பயணித்த 127 பேரிடமும் ஹவுரா எக்ஸ்பிரஸில் பயணித்த 5 பேரிடமும் பேசியுள்ளோம்.
தமிழகத்தை சேர்ந்தவர்களை பாதுகாப்பாக அழைத்து வர முதலமைச்சர் தகுந்த நடவடிக்கை எடுத்துள்ளார். அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், எஸ்.எஸ்.சிவசங்கர் ஆகியோருடன் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவும் ஒடிசா சென்றுள்ளது.
பாதிக்கப்பட்ட தமிழர்களை விமானம் மூலம் அழைத்து வந்து சிகிச்சை அளிப்பதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளது. ரயிலில் பயணித்த தமிழர்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள் மற்றும் உயிரிழந்தார்கள் என்பது குறித்து புள்ளிவிவரங்களுடன் பின்னர் தகவல் வெளியிடப்படும்“ என்று தெரிவித்துள்ளார்.
மோனிஷா
படுகாயமடைந்தவர்களை தமிழகம் அழைத்து வர விமானம் ஏற்பாடு: தென்னக ரயில்வே!
ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு மருத்துவ வசதிகள் தயார்: உதயநிதி ஸ்டாலின்