சாதம் – குழம்பு – ரசம் – பொரியல் என ஒரே விதமான சமையலில் இருந்து ஒரு மாறுதலுக்காகவும் அவசரத்துக்கு செய்யவும் கலந்த சாதங்கள் உதவும். இந்த கமகம கொத்தமல்லி சாதம், பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கு மட்டுமல்லாமல்… வீட்டில் உள்ள அனைவருக்கும் பிடித்தமானதாக இருக்கும்.
என்ன தேவை?
உதிர் உதிராக வடித்த சாதம் – 2 கப்
கொத்தமல்லித் தழை – 2 கட்டு
காய்ந்த மிளகாய் – 8
உளுத்தம்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்
பெருங்காயம் – சிறு துண்டு
புளி – சிறு எலுமிச்சை அளவு
கடுகு, உளுத்தம்பருப்பு (தாளிக்க) – தலா அரை டீஸ்பூன்
கறிவேப்பிலை – ஒரு ஆர்க்கு
நெய்யில் வறுத்தெடுத்த முந்திரி – 6
நெய், எண்ணெய், உப்பு – தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கொத்தமல்லித்தழையை நன்கு அலசி சுத்தம் செய்து, பொடியாக நறுக்கிக்கொள்ளவும். வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு, காய்ந்ததும் பெருங்காயம், காய்ந்த மிளகாயை சேர்த்து வறுத்தெடுக்கவும். பிறகு, உளுத்தம்பருப்பை வறுத்து எடுத்து தனியே வைக்கவும்.
அடுப்பை அணைத்து அந்த சூட்டிலேயே கொத்தமல்லித்தழையை வதக்கி எடுத்து அனைத்தையும் ஒன்றாகச் சேர்த்து… அதனுடன் புளி, சிறிதளவு உப்பு சேர்த்து நைஸாக அரைத்தெடுக்கவும்.
வாணலியில் சிறிதளவு நெய் விட்டு கடுகு, உளுத்தம்பருப்பு, கறிவேப்பிலையை தாளிக்கவும். அரைத்த கொத்தமல்லித்தழை விழுது, தாளிதக் கலவையை சாதத்துடன் சேர்த்து, உப்பு சேர்த்து நன்கு கலந்து, வறுத்த முந்திரி தூவி பரிமாறவும்.
உருளைக்கிழங்கை தோல்சீவி நான்கு துண்டுகளாக்கி, அதை மெல்லியதாக நறுக்கி மிளகாய்த்தூள், உப்பு சேர்த்து வறுத்து இதற்குத் தொட்டுக்கொள்ளலாம்.