குன்னூரில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்து விபத்து நடந்த பகுதியில் திமுக துணைப் பொதுச்செயலாளரும் திமுக எம்.பி.யுமான ஆ.ராசா பார்வையிட்டார்.
தென்காசி மாவட்டம் கடையத்திலிருந்து அந்த பகுதியைச் சேர்ந்த 50க்கும் மேற்பட்டோர் சுற்றுலா கிளம்பினர். இவர்கள் கேரளாவில் குருவாயூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்றுவிட்டு அங்கிருந்து நீலகிரி மாவட்டம் குன்னூருக்கு வந்திருக்கின்றனர்.
செப்டம்பர் 29ஆம் தேதி குன்னூர் வந்த இவர்கள், நேற்று மாலை குன்னூரிலிருந்து கோவை மருதமலைக்கு புறப்பட்டனர்.
குன்னூர் மலைப்பாதை வழியாக சென்று கொண்டிருந்த போது பேருந்து மரப்பாலம் அருகே 9-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பியபோது விபத்தில் சிக்கியது.
ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலை தடுப்பை இடித்துக்கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் பேருந்திலிருந்தவர்கள் அலறிக் கொண்டு கத்தினர்.
இதையடுத்து மற்ற வாகன ஓட்டிகள் தெரிவித்த தகவலைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசாரும் தீயணைப்புத் துறையினரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
இதில் விபத்தில் சிக்கி கலா(42) மூக்குத்தி(67), கௌசல்யா(29), தங்கம் (40), ஜெயா (50), நிதின் கண்ணா(15), முருகேசன்(60), இளங்கோ(67) என 8 பேர் உயிரிழந்தனர். இன்று காலை பேருந்துக்கடியில் சிக்கியிருந்த ஒரு மூதாட்டியின் உடல் மீட்கப்பட்டது.
40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
விபத்தில் உயிரிழந்தவர்களுக்குப் பிரதமர் தலா ரூ.2 லட்சமும், முதல்வர் தலா ரூ.2 லட்சமும் நிவாரணம் அறிவித்தனர்.
இந்நிலையில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை நாளை சந்திக்கச் செல்வதாக நேற்று திமுக துணைப் பொதுச்செயலாளரும் எம்.பி.யுமான ஆ.ராசா அறிவித்திருந்தார்.
அதன்படி இன்று (அக்டோபர் 1) குன்னூரில் விபத்து நடந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்தார்.
மேலும் குன்னூர் அரசு லாலி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விபத்துக்குள்ளான சுற்றுலா பயணிகளை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கு வழங்கப்படும் சிகிச்சை குறித்தும் கேட்டறிந்தார்.
நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தொடரைத் தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த ஆ.ராசா கடந்த சில நாட்களாக ஓய்வில் இருந்த நிலையில் இன்று விபத்தில் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறியுள்ளார்.
பிரியா
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஆசிய விளையாட்டுப் போட்டி: பதக்கம் வென்ற தமிழக வீரர்!
வெற்றிமாறன் கதையில் விஜய் சேதுபதி; ஆனா வேற டைரக்டர்!
டிஜிட்டல் திண்ணை: காணொலிக் கூட்டம்… ஸ்டாலினிடம் சிக்கிய ஏழு மாசெக்கள்