ஸ்ரீமதி மரணத்தில் உரிய விசாரணை நடத்தப்பட்டு குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் என்று முதலமைச்சர் உறுதி அளித்ததாக ஸ்ரீமதியின் பெற்றோர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த விவகாரம் பூதாகரமானது.
போராட்டம் வெடித்ததையடுத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டு விசாரணை நடந்து வருகிறது.
இந்த வழக்கில் பள்ளி தாளாளர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களுக்கு நேற்று(ஆகஸ்ட் 26) சென்னை உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.
இந்நிலையில் ஸ்ரீமதியின் பெற்றோர் சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்தித்துப் பேசினர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்ரீமதியின் தாய் செல்வி, “தனது மகளுக்கு நீதி கிடைக்கவேண்டும்.
குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும் என்று முதல்வரிடம் கேட்டுக்கொண்டதாகக் கூறினார்.
விசாரணையை துரிதப்படுத்தி வழக்கை விரைவில் முடித்து வைக்க உத்தரவிடுமாறும், கலவரத்தில் தொடர்பில்லாத பள்ளி மாணவர்களை கைது செய்யக்கூடாது என்றும்,
பள்ளி தாளாளர் உள்பட 5 பேருக்கு வழங்கப்பட்ட ஜாமீனை ரத்து செய்யக்கோரி உச்ச நீதிமன்றத்தில் அரசு சார்பில் மேல்முறையீடு செய்யவேண்டும் என்றும் அவர் முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்ததாகத் தெரிவித்தார்.
குற்றவாளிகள் யாராக இருந்தாலும் நிச்சயம் தண்டனை கிடைக்கும், யாரும் தப்ப முடியாது என்று முதலமைச்சர் உறுதி அளித்தாக செல்வி கூறினார்.
ஸ்ரீமதி உடற்கூறாய்வு தொடர்பான ஜிப்மர் மருத்துவமனையின் ஆய்வறிக்கை தங்கள் கைக்கு இன்னும் கிடைக்கவில்லை என்றும் முதல் 2 பிரேத பரிசோதனை முடிவுகளிலும் பல தகவல்கள் மறைக்கப்பட்டு இருப்பதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.
சிபிசிஐடி விசாரணை தாமதமாக நடைபெற்றாலும், உண்மையை கண்டுபிடிப்பார்கள் என்று தற்போது வரை நம்புவதாகத் தெரிவித்தார்.
பள்ளி நிர்வாகம் இதுவரை தங்களுக்கு முழுமையான சிசிடிவி காட்சிகளை காட்டாதது ஏன் என்று கேள்வி எழுப்பிய அவர், முக்கிய ஆட்களை கையில் வைத்துக் கொண்டு உண்மையை மறைக்க முயற்சி நடைபெறுவதாகக் கூறினார். ஆனால் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஸ்ரீமதிக்கு நீதியை பெற்றுத் தருவார் என்று நம்புவதாக செல்வி தெரிவித்தார். ஜாமீனில் வெளிவந்த 5 பேரும் குற்றமற்றவர்கள் என்று இன்னும் நிரூபிக்கப்படவில்லை, விரைவில் உண்மை வெளிவரும் என்றும், சிபிசிஐடி அதிகாரிகள் தங்கள் சந்தேகங்களுக்கு விளக்கம் அளிப்பதுடன், கிடைக்கும் தகவல்களை தங்களுக்கு முதலில் தெரிவிக்கவேண்டும் என்றும் ஸ்ரீமதியின் தாய் முதலமைச்சரின் சந்திப்புக்கு பிறகு பேசினார்.
கலை.ரா
கள்ளக்குறிச்சி பள்ளித் திறப்பு விவகாரம்: உயர் நீதிமன்றம் உத்தரவு!