பெரியார் சிலையை உடையுங்கள் என்று சர்ச்சைக்குரிய வகையில் பேசிய திரைப்பட ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் கடந்த ஒருமாதகாலமாக இந்து முன்னணி சார்பில் இந்துக்கள் உரிமை மீட்பு பிரச்சாரம் என்ற பயணம் தொடங்கி நடைபெற்று வந்தது. அதன் நிறைவு விழா சென்னை மதுரவாயலில் நடைபெற்றது.
இதில், பேசிய ஸ்டண்ட் மாஸ்டரும், இந்து முன்னணி அமைப்பின் மாநில கலை மற்றும் பண்பாட்டுத் துறை தலைவருமான கனல் கண்ணன்,
“இந்துவாக இருப்பதை எண்ணி பெருமைப்படுகிறேன். மேலும் வாளெடுத்து சண்டை போட்ட காலம் மாறி இப்போது மதமாற்றம் என்ற பெயரில் நாடு பிடிக்கிறார்கள். ஸ்ரீரங்கம் கோவிலில் சாமி தரிசனம் செய்து விட்டு வெளியில் வரும்போது அங்கு ஒரு சிலை இருக்கிறது. அதில் கடவுள் இல்லை என எழுதப்பட்டிருக்கிறது. அந்த சிலை எப்போது உடைக்கப்படுகிறதோ அதுதான் இந்துக்களின் எழுச்சி நாளாக இருக்கும்” என்று சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார்.
அவரின் இந்த கருத்துக்கு திராவிட இயக்க ஆர்வலர்கள் உட்பட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் சமூகத்தில் பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பேசியுள்ள கனல்கண்ணனை கைது செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்தனர்.

இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடக் கழகம் சார்பில் சென்னை சைபர் கிரைம் போலீசிலில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் கனல் கண்ணன் மீது கலகம் செய்யத் தூண்டுதல், அவதூறு செய்தி மூலம் பொதுமக்களிடையே விரோதத்தைத் தூண்டுவது ஆகிய பிரிவுகளின் கீழ் போலீஸ் வழக்குப்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
கண்டனங்கள் குவிவதை அடுத்து கனல் கண்ணன் தலைமறைவாகிவிட்டதாகக் கூறப்படுகிறது. கண்ணனை கைது செய்வதற்காக மதுரவாயலில் உள்ள அவரது வீடு உள்ளிட்ட மூன்று இடங்களில் போலீசார் தயார் நிலையில் உள்ளதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
–கலை.ரா
’என்னை ஏன் மாற்றச் சொன்னீர்கள்?’ -ஓபிஎஸ்சுக்கு நீதிபதி கண்டனம்!