கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட ஒப்பந்த செவிலியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டத்தைத் தொடர்ந்து நாளை (ஜனவரி 5) உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அறிவித்துள்ளனர்.
கடந்த 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவலின் போது அவசரமாக 7 ஆயிரம் மருத்துவ ஊழியர்கள் பணியமர்த்தப்பட்டார்கள்.
அவர்களின் உதவியோடு தமிழ்நாடு மருத்துவத் துறை கொரோனா பரவலைக் கண்காணித்து வந்தது.
இந்நிலையில் ஒப்பந்த செவிலியர்கள் டிசம்பர் 31 ஆம் தேதி முதல் பணிக்கு வர வேண்டாம் என்று டிசம்பர் 30 ஆம் தேதி இரவு தமிழக அரசு அறிவித்துள்ளது.
இந்த செய்தியினை கேட்டு அதிர்ச்சியடைந்த செவிலியர்கள் “முதல்வர் ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ‘நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் கொரோனா தொற்று காலத்தில் பணி அமர்த்தப்பட்டவர்களைப் பணி நிரந்தரம் செய்வோம்” என்று வாக்குறுதி அளித்தார்.
அவர்தான் எங்களை தற்போது வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். பணி நிரந்தரம் செய்வார்கள் என்ற நம்பிக்கையில் தான் 30 மாதங்களாக 14 ஆயிரம் குறைவான ஊதியத்திற்கு வேலை செய்து வந்தோம்.
இனி எங்கள் வாழ்க்கை என்னாகுமோ” என்று அவர்களது வேதனையை மின்னம்பலத்திடம் பகிர்ந்து கொண்டனர்.
தொடர்ந்து பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்கள், தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி மாநிலம் முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இது குறித்துப் பேசிய மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், பணி நீக்கம் செய்யப்பட்ட ஒப்பந்த செவிலியர்களுக்கு மாற்றுப் பணி வழங்கப்படும் என்றும் ஆட்சியர் தலைமையிலான குழு அமைக்கப்பட்டு செவிலியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் எனவும் கூறியிருந்தார்.
ஆனால், நிரந்தர பணி வழக்கும் வரை போராட்டத்தைத் தொடர்வோம் என்று கூறி, செவிலியர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டையில் உள்ள டிஎம்எஸ் வளாகத்தில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இந்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்த நிலையில் நாளை (ஜனவரி 5) சென்னை வள்ளுவர் கோட்டத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகச் செவிலியர்கள் அறிவித்துள்ளனர்.
மோனிஷா
அதென்ன ஓபிஎஸ் ஈபிஎஸ்?: நீதிபதிகள் கேள்வி!
ஈரோடு கிழக்கு எம்.எல்.ஏ உயிரிழப்பு: ஈவிகேஎஸ் குடும்பத்தில் நிகழ்ந்த சோகம்!