முதுமலை எல்லை பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மதுரை பகுதியில் விளைநிலத்தைக் கடக்க முயன்ற ஆண் யானையின் மீது மின்சாரம் பாய்ந்ததில் பரிதாபமாக உயிரிழந்தது, கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
ஏற்கெனவே கடந்த 30-ம் தேதி கூடலூர் அருகில் உள்ள மச்சிக்கொல்லி பகுதியில் சுற்றித்திரிந்த ஆண் யானை ஒன்று அருகில் இருந்த பாக்கு மரத்தை சாய்க்க முயன்றபோது தாழ்வான மின் கம்பியில் மரம் உரசியதில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தது.
மேலும் நீலகிரி மாவட்டம் தொரப்பள்ளி பகுதியில் உள்ள ஒரு வாழைத் தோட்டத்தை கடந்த மாதம் கடக்க முயன்றபோது சேற்றில் அந்த யானை சிக்கியது.
முன்னங்கால்கள், தந்தங்கள் மற்றும் தும்பிக்கை ஆகிய உடல் பாகங்கள் சேற்றுக்குள் புதைந்த நிலையில், மூச்சுத்திணறலால் துடிதுடித்து பரிதாபமாக உயிரிழந்தது.
இப்படி தொடர்கதையாகும் யானைகளின் இறப்பு கூடலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்த நிலையில் நேற்று (7.8.2024) மின்சாரம் தாக்கி யானை உயிரிழந்தது குறித்து பேசியுள்ள கூடலூர் வனக்கோட்ட அதிகாரிகள்,
“வருவாய் நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம் செய்ததுடன், சட்டவிரோதமாக மின்வேலியும் அமைத்திருக்கிறார்கள்.
இந்த பகுதியை கடக்க முயன்ற சுமார் 10 வயது மதிக்கத்தக்க ஆண் யானை மின்சாரம் தாக்கி உயிரிழந்திருக்கிறது. உடல் கூறாய்வின்போது யானையின் இதயத்தை ஆய்வு செய்தோம்.
மின்சாரம் பாய்ந்து உயிரிழந்திதற்கான அறிகுறிகள் கண்டறியப்பட்டது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறோம்” என்று கூறியுள்ளனர்.
தொடர்கதையாக யானைகளின் இறப்பு பற்றி பேசியுள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்,
“நாட்டில் யானை – மனித எதிர்கொள்ளல்கள் அதிகம் ஏற்படும் பகுதிகளில் நீலகிரி மாவட்டத்தின் கூடலூர் முக்கிய இடத்தில் இருக்கிறது. யானைகளிடம் இருந்து மனிதர்களையும், மனிதர்களிடமிருந்து யானைகளையும் பாதுகாக்க பெரும் போராட்டமே நடந்து வருகிறது.
மனித தவறுகளால் யானைகள் தொடர்ந்து உயிரிழந்து வருகின்றன. யானைகள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் தாழ்வாகச் செல்லும் மின்கம்பிகள் மற்றும் சட்டவிரோத மின்வேலிகளை மின்வாரியம் கண்டுகொள்வதில்லை. இதனாலேயே இது போன்ற இறப்புகள் தொடர்ந்து வருகின்றன.
இதற்கான தீர்வு விரைவில் கிடைக்க வேண்டும். இல்லையென்றால் யானைகளின் இறப்பு தொடர்கதையாகும்” என்று தெரிவித்துள்ளனர்.
-ராஜ்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
ஹெல்த் டிப்ஸ்: நடைப்பயிற்சி… நில் – கவனி – செல்!
Vinesh Phogat: வெள்ளிப் பதக்கம் கேட்டு வினேஷ் போகத் மேல்முறையீடு!
பியூட்டி டிப்ஸ்: சரும வறட்சி… சமாளிப்பது எப்படி?
டாப் 10 நியூஸ்: செந்தில் பாலாஜி வழக்கில் குற்றச்சாட்டு பதிவு முதல் வினேஷ் போகத் ஓய்வு வரை!