சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலைகளைத் தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாணவர்கள் நேற்று நள்ளிரவு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்வேறு சமூக சூழலிலிருந்தும் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்து சென்னை ஐஐடியில் ஏராளமான மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்த நிலையில் சென்னை ஐஐடியில் மாணவர்களின் தற்கொலை என்பது தொடர்கதையாகி வருகிறது.
2016 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை 12-க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். குறிப்பாக 2019 ஆம் ஆண்டு கேரளாவைச் சேர்ந்த மாணவி பாத்திமா லத்திப் தற்கொலை செய்து கொண்டது நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
இந்நிலையில் கடந்த பிப்ரவரி 13ஆம் தேதி மகாராஷ்டிராவை சேர்ந்த ஸ்டீபன் சன்னி என்ற ஆராய்ச்சி மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த மார்ச் 14ஆம் தேதி ஆந்திராவைச் சேர்ந்த மாணவர் வைப்பு புஷ்க் சென்னை ஐஐடி விடுதி அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
கடந்த மார்ச் 31ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த சச்சின் குமார் ஜெயின் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டார்.
வேளச்சேரியில் வீடு எடுத்துத் தங்கி படித்து வந்த இவர், வீட்டு அறையில் தற்கொலை செய்து கொண்டார்.
சச்சின் குமாரின் தற்கொலைக்கு பேராசிரியர்கள் தான் காரணம் என்று ஐஐடியில் படிக்கும் சக மாணவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் சென்னை ஐஐடியில் நிகழும் மாணவர்களின் தற்கொலைகள் மறைக்கப்படுவதாகவும் சச்சின் தற்கொலைக்கு நீதி கேட்டும் நேற்று நள்ளிரவு முதல் ஐஐடி மாணவர்கள் விடிய விடியப் போராட்டம் நடத்தினர்.
அப்போது, “சச்சின் மரணத்திற்குக் காரணமான வழிகாட்டி பேராசிரியர் அகிஷ்குமார் சென், அதை மறைக்க நினைக்கும் டீன் நிலேஷ் வச ஆகியோரை பணி நீக்கம் செய்ய வேண்டும்.
தற்கொலையை விசாரிக்க நீதிபதி தலைமையில் ஆய்வுக் குழு அமைக்க வேண்டும்” என்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் வலியுறுத்தினர்.
இந்த போராட்டத்தைத் தொடர்ந்து ஐஐடி இயக்குநர் காமகோடி, ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில், மாணவர்களின் தற்கொலைகள் குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்படும் என்று உறுதியளித்தார். போலீசாரும் வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.
எனினும் அந்த குழுவில் மாணவ பிரதிநிதிகளைச் சேர்க்கக் கோரி விடிய விடிய ஐஐடி முன்பு, மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பிரியா
கொரோனா : தமிழகத்தில் மூன்றாவது நாளாக உயிர்பலி!
வேலைவாய்ப்பு : தமிழ்நாடு சிறைதுறையில் பணி!
டிஜிட்டல் திண்ணை: ஓபிஎஸ்-சசிகலா- டிடிவி… ’சித்திரைக் கூட்டணி’க்கு வைத்தி போடும் ஸ்கெட்ச்!
’ஆளுநர் மாளிகை.. முதல்வர் இல்லமாக மாற வேண்டும்’: கண்டன பொதுக்கூட்டத்தில் கோரிக்கை!
