கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்திய இந்திய கடற்படை அதிகாரிகள், கைகளை பின்னால் கட்டி இரும்பு ராடால் அடித்து துன்புறுத்தியதாக உயிர்தப்பிய மீனவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தைச் சேர்ந்த 7மீனவர்கள் மற்றும் காரைக்காலைச் சேர்ந்த 3மீனவர்கள் மீது இந்திய கடற்படை நேற்று(அக்டோபர் 21)காலை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் மீனவர் வீரவேல் காயமடைந்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.
இந்திய கடற்படையினரே தமிழக மீனவர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. கடற்படையினருக்கு உரிய அறிவுறுத்தல் வழங்குமாறு பிரதமர் மோடிக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதினார்.
மீனவர்கள்மீது துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்கிய இந்திய கடற்படை வீரர்கள் மீது வேதாரண்யம் மெரைன் காவல் நிலையத்தில் கொலை முயற்சி வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில் துப்பாக்கிச்சூட்டில் உயிர் பிழைத்த மீனவர்கள் கண்ணீர் மல்க பேட்டியளித்தனர்.
அதில் நடுக்கடலில் மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது அதிகாலை ஒரு கடற்படை கப்பல் தங்களை நோக்கி வந்ததாகவும், படகை நிறுத்துமாறு சத்தம் போட்டதாகவும் தெரிவித்தனர்.
அது இலங்கை கடற்படையின் கப்பல் என நினைத்து தான் வலையை அறுத்துவிட்டு வேகமாக கரையை நோக்கி திரும்பியதாக மீனவர்கள் தெரிவித்தனர்.
ஆனால் அதற்குள் இந்திய கடற்படை அதிகாரிகள் சரமாரியாக துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும்,உயிருக்கு பயந்து ஆங்காங்கே பதுங்கிக் கொண்டதாகவும் அவர்கள் கூறினர்.
அதில் ஒரு மீனவருக்கு குண்டு பாய்ந்த நிலையில், அவரை மட்டும் ஹெலிகாப்டரில் அழைத்து சென்றதாகவும், மற்ற அனைவரையும் கைகளை பின்னால் கட்டி இரும்பு ராடால் சுமார் 2மணி நேரம் அடித்து சித்ரவதை செய்ததாகவும் கண்ணீர் மல்கக் கூறினர்.
போதைப் பொருள் கடத்தியதாகக் கூறி சோதனையிட்டதுடன், ஆதார் கார்டுகளை வாங்கி வீசியெறிந்த கடற்படை அதிகாரிகள் மீனவர்கள் கதறுவதை பார்த்து சிரித்ததாகவும் தெரிவித்தனர்.
இதுபோன்ற நிலை தொடராமல் இருக்க மத்திய-மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கலை.ரா காலநிலையை கண்காணிக்க அடுத்த குழு!
வீர சிம்ஹா ரெட்டி: மீண்டும் ஆக்ஷனில் பாலகிருஷ்ணா