தமிழகத்தில் பள்ளி, கல்லூரி மாணவ – மாணவிகளின் தற்கொலை முயற்சியும், தற்கொலைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருவது ஏன் என்ற வினாக்களுக்கு விடைத் தேடி மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர்கள் மத்தியில் ஆய்வு செய்ததில் கிடைத்த சில உண்மைகள்…
கொரோனா வைரஸ் தொற்று பரவலால் நாடே லாக்டவுனில் இருந்தது. பள்ளி, கல்லூரிக்கும் லாக்டவுன் என்பதால் மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு ஆன்லைன் வகுப்பு எடுத்து வந்தனர் தனியார் மற்றும் அரசுப் பள்ளி, கல்லூரி ஆசிரியர்கள். அந்தக் காலகட்டத்தில்தான் ஆண்ட்ராய்டு செல்போன்களைத் தொட்டுப் பார்க்காத ஏழை பிள்ளைகளும் செல்போனில் பாடம் படித்து வந்தார்கள்.
ஆன்லைன் வகுப்புகளில் ஆசிரியர்கள் எடுக்கும் பாடங்களை மாணவர்கள் கவனிக்கிறார்களா, இல்லையா என்பது ஆசிரியர்களுக்கும் சரியாகத் தெரிய வாய்ப்புகள் இல்லை.
பிள்ளைகள் ஆன்லைனில் படிக்கப் பெற்றோர்கள், செல்போன் வாங்கிக்கொடுத்தால் அதைத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டு ஆன்லைன் விளையாட்டுகளில் எல்.கே.ஜி மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரையில் தீவிரம் காட்டினார்கள் .
2022ஆம் ஆண்டு பள்ளி முழு ஆண்டு தேர்வு நடைபெறும் நேரத்தில் புதுச்சேரி மாணவர்கள் கூட்டமாக வந்து முதல்வர் ரங்கசாமியைச் சந்தித்து, “எங்களுக்குத் தேர்வு வேண்டாம். ஆல் பாஸ் போடுங்கள். இல்லை என்றால் போராட்டம் செய்வோம்” என்றார்கள். இதை ஏன் குறிப்பிடுகிறோம் என்றால் மாணவர்கள் தேர்வு எழுதும் மனநிலையில் இல்லை என்பது தெரியவருகிறது. தமிழகத்திலும் கல்லூரி மாணவர்கள் நேரடித் தேர்வுக்கு எதிர்ப்புத் தெரிவித்தனர்.
முதலில் மாணவ-மாணவிகளின் தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிகளைப் பற்றிப் பார்ப்போம்.
மார்ச் 28ஆம் தேதி சேலம், ஆத்தூர் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்த மாணவன் விடுதியில் தங்கியிருந்தபோது அங்குள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டான்.
ஜூலை 13ஆம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்ன சேலம் அருகில் உள்ள சக்தி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்த ஸ்ரீமதி என்ற மாணவி சந்தேகத்துக்கிடமாக உயிரிழந்தார். விடுதியின் மூன்றாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் பெரும் போராட்டமாக மாறி, பள்ளி சூறையாடப்பட்டது, அதனால் ஐந்நூறுக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு சிறைக்குச் சென்றுள்ளார்கள்.
ஜூலை 18ஆம் தேதி காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பாரதிதாசன் பள்ளியில் படித்த ஈசிகாந்த் என்ற மாணவன் பள்ளியின் இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றபோது கை கால் உடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறான்.
அதே நாளில் சேலம் மேச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்த கோகிலவாணி என்ற மாணவி இரண்டாவது மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார்.
ஜூலை 25ஆம் தேதி, திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரியில் உள்ள அரசு உதவி பெறும் சேகர் ஹார்ட் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி சரளா மரணம்.
விழுப்புரம் மாவட்டத்தில் அமைச்சருக்குச் சொந்தமான பொறியியல் கல்லூரியில் படிக்கும் 18 வயது மாணவி ரம்யா இரண்டாவது மாடியிலிருந்து தற்கொலைக்கு முயன்றபோது இடுப்பு மற்றும் கால் பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. அன்று இரவு கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சக்தி பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்துவந்த சிவகாமி என்ற மாணவி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை.
ஜூலை 26ஆம் தேதி, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அரசு உதவிபெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படிக்கும் சதீஷ் என்ற மாணவன் வகுப்பில் செல்போன் வைத்து நோண்டிக்கொண்டு இருந்ததால் ஆசிரியர்கள், பெற்றோர்களிடம் சொல்லி செல்போனை வாங்கிக்கொண்டனர். இதனால் விரக்தியான மாணவன் ஓடும் ரயிலில் பாய்ந்து விழுந்து தற்கொலை செய்துகொண்டான். அதேநாளில் அதே மாவட்டத்தில் கல்லாடி சிதம்பரபுரம் பகுதியில் பாப்பா என்ற கல்லூரி மாணவி வீட்டிலேயே தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இதுபோல் மாணவ-மாணவிகளின் தற்கொலையும் தற்கொலை முயற்சியும் அதிகரித்து வருகிறது, மரணம் பயம் இல்லாமல் விளையாட்டாகச் செய்துவருவது பெரும் அச்சத்தை ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் ஏற்படுத்தியுள்ளது
இதுகுறித்து சேலம் மாவட்டத்தில் உள்ள பிரபலமான பள்ளி தாளாளர், மாணவர்கள் தற்கொலைக்கு முயற்சி செய்வது பற்றியும் ஆசிரியர்கள் படும் கஷ்டங்களைப் பற்றியும் பேசினார்.
“கொரோனா பரவல் நேரத்தில் பள்ளிகளுக்கு விடுப்பு விட்டது சரிதான். அது மாணவர்களின் உயிர் பிரச்சினை. அதைப் பற்றி குறைகள் சொல்ல முடியாது. பள்ளியில் வகுப்பில் ஒரு பாடத்துக்கு 45 நிமிடங்கள் ஒதுக்கி பாடம் எடுக்கும்போதே முழுமையாகக் கற்றுக்கொடுக்க முடியவில்லை. ஆன்லைனில் எப்படிக் கற்றுக்கொடுக்க முடியும்? அப்படிக் கற்றுக்கொடுத்தாலும் மாணவர்கள் அலட்சியப்படுத்துகிறார்கள். பாடத்தைக் கவனிக்க மறுத்து செல்போனில் கேம் விளையாடுகிறார்கள். ஆன்லைன் வகுப்பு என்பது ஒரு பார்மலிட்டி. மாணவனுக்கும் ஆசிரியர்களுக்கும் உள்ள தொடர்புகள் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான்.
பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவனுக்குத் தற்போது எழுத்து திறனும் இல்லை; படிப்பு திறனும் இல்லை. சொல்லவே வெட்கமாக இருக்கிறது. மாணவர்களின் கையெழுத்து கந்தல் கோலமாக உள்ளது, அதனால் தமிழகம் முழுவதும் தனியார் பள்ளிகளில் இரண்டு லைன், நான்கு லைன் நோட் புக் கொடுத்து எழுதப் பயிற்சி கொடுத்து வருகிறோம். காலையில் வகுப்பு தொடவங்கியதும் பத்தாம் வகுப்புப் பாடம் எடுக்காமல் முதலில் எட்டு, ஒன்பதாவது வகுப்பு பாடங்களை மேலோட்டமாக நடத்திவிட்டுதான் அடுத்த கட்டத்துக்குப் போகிறோம், பெரும்பாலான மாணவர்கள் படிக்க திணறுகிறார்கள், அதேபோல்தான் பதினொன்றாம் மற்றும் பன்னிரண்டாம் மாணவர்களும் இருக்கிறார்கள்.
கொரோனா காலத்தில் வீட்டிலிருந்தபோது மன அழுத்தத்தில் உள்ள மாணவர்கள் இன்னும் தெளியவில்லை. அதற்குள் மாணவர்களைத் தேர்ச்சி பெற வைக்க வேண்டும் என்று பெரும்பாலான தனியார் பள்ளிகள் ஒன்பது, பத்து, பதினொன்றாம், பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களைக் கட்டாயமாக விடுதியில் தங்கவைத்து அழுத்தம் கொடுக்கவேண்டியதாக உள்ளது.
விடுதியில் உள்ள மாணவர்களை காலை 4.00 மணிக்கு எழுப்பி 9.00 மணி வரையில் படிக்க வைக்கப்படுகிறார்கள். இடையில் அவசரமாகச் சாப்பிடவேண்டும். அதன் பிறகு பள்ளிக்குச் சென்று வகுப்பில் நடத்தப்படும் பாடத்தைப் படிக்க வேண்டும் ஒரு பாடத்துக்கு 45 நிமிடங்கள். பள்ளி விட்டதும் சிறப்பு வகுப்பு மாலை 6.00 மணி வரையில், அதன் பிறகு விடுதியில் படிக்க வேண்டும். இதெல்லாம் தனியார் பள்ளிகளில் என்றால், அரசுப் பள்ளியும் தனியார் பள்ளியுடன் போட்டிப்போட்டுக்கொண்டு பத்தாம் வகுப்பு மாணவர்கள் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு காலையிலும் மாலையிலும் சிறப்பு வகுப்புகள் என்று மாணவர்களைப் பிழிந்து எடுக்கிறார்கள். அரசுப் பள்ளிக்குக் காலையில் 8.00 மணிக்கு வர வேண்டும். அந்த மாணவர்கள் ஐந்து கிலோமீட்டர் தூரத்திலிருந்து பஸ் பிடித்து வர வேண்டும் என்றால் காலையில் 5.00 மணிக்கு எழுந்திருக்க வேண்டும். பெரும்பாலான மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கிப் படிப்பவர்கள்தான் தற்கொலை செய்து கொள்கிறார்கள், தற்கொலை முயற்சி செய்கிறார்கள்” என்றார்.
விழுப்புரம் மாவட்டத்தில் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவி மீனாட்சியிடம் பேசியபோது, “பள்ளிக்குச் சென்றால், ‘படிச்சுட்டியா? ஏன் படிக்கலை? உனக்குப் படிப்பு வராதா? ஏன் எங்கள் உயிரை எடுக்கறீங்க? போயிட்டு வேறு வேலையைச் செய்யுங்கள்’ என்று ஆசிரியர்கள் பேசுகிறார்கள்.
வீட்டுக்கு வந்தால், ‘கடன் வாங்கி படிக்க வைக்கிறேன். வீட்டு கஷ்டத்தை நினைச்சு நல்லா படி. அதிக மார்க் வாங்கு. அப்போதான் அரசாங்க வேலைக்குப் போக முடியும்’ என்கிறார்கள். கொரோனா காரணத்தால் இடையில் பள்ளிக்குப் போகாததால் படிப்பில் ஆர்வம்காட்ட முடியவில்லை. பாஸ் என்பதைப் பற்றித்தான் நினைத்தோம். படிப்பைப் பார்க்கவில்லை. இப்போது பள்ளி திறக்கப்பட்டதும் ஒரே நேரத்தில் திணிப்பதால் கஷ்டமாக உள்ளது” என்றார்.
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளி ஆசிரியை, “பிள்ளைகள் பாடத்தை கவனிப்பதில்லை. கேட்டால் எதிர்த்து பேசுறானுங்க, இப்போது அரசுப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவிட்டது, பத்தாம் வகுப்பு மாணவர்களுக்குப் பெருக்கல், கழித்தலே தெரியவில்லை. என்ன சொல்வது என்று புரியவில்லை. கடந்த காலங்களில் ஓவிய ஆசிரியர், தறி ஆசிரியர், விளையாட்டு ஆசிரியர் இருப்பார்கள். மாணவர்களும் ரிலாக்ஸா இருப்பார்கள். தற்போது தனியார் பள்ளிக்கு ஈடாக அரசுப் பள்ளியும் வர வேண்டும் என்று அதிகாரிகள் நெருக்கடிகள் கொடுப்பதால் அந்தந்தப் பாட ஆசிரியர்கள் அவரவர் பாடத்தில் மார்க் எடுக்க வேண்டும் என்று கசக்க வேண்டியதாக இருக்கிறது. அதிகமாகக் கசக்கினால் ஸ்கூலை விட்டு வீட்டுக்குப் போகும்போது சில மாணவர்கள் கொடுக்கும் டார்ச்சர்கள் எங்களைப் போன்ற ஆசிரியர்களுக்கு மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது” என்கிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளரும் தலைமை ஆசிரியருமான சி.வீரமணி, “மாணவர்கள் வகுப்பில் உட்காரணும் எழுதணும் என்கிற மனநிலைக்கு இன்னும் வரவில்லை, கேரக்டரும் மாறிவிட்டது, மாணவர்களை வகுப்பில் உட்காரவைப்பதே ஆசிரியர்களுக்குப் பெரிய சவாலாக உள்ளது. முன்பெல்லாம் ஒரு வகுப்பில் நடத்தப்படும் 45 நிமிடப் பாடத்தை நன்கு கவனிப்பான். இப்போது வகுப்பில் உட்காரவைப்பதைக் கட்டிப் போட்டு வைத்துள்ளதாக உணர்கிறான். பல காரணங்களைச் சொல்லிவிட்டு அடிக்கடி வகுப்பிலிருந்து வெளியேறுகிறான்.
பெற்றோர்களின் கட்டுப்பாட்டிலே பல மாணவர்கள் இல்லை. அவர்கள் சொல்வதைக் கேட்பதில்லை. அடிக்கடி ஆப்சென்ட் ஆகிறார்கள். பழைய நிலைமைக்குக் கொண்டுவருவதற்குக் கொஞ்சம் காலமாகும். பாடத்தை எளிமையாக்க வேண்டும். அப்படியானால் நீட் தேர்வில் கஷ்டமாக இருக்கும். மாணவர்களுக்குப் படிப்பில் அக்கறையோ, ஆர்வமோ இல்லை. வாழ்க்கையில் ஒரு பிடிப்பும் இல்லை. மாணவர்களை ஆசிரியர்கள் கஷ்டப்பட்டுச் செதுக்க வேண்டும். பெற்றோர்களும் மாணவர்கள்மீது அதிகமான அக்கறை எடுக்க வேண்டும். மாணவர்களை உளவியல் மூலமாக அணுக வேண்டும். அவசியம் மனநல மருத்துவர்களின் கவுன்சலிங் கொடுத்தாக வேண்டும்” என்றார்.
காஞ்சிபுரம் மாவட்டம் படுநெல்லி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜ், “கொரோனாவுக்கு முன்பு பிள்ளைகள் காலையில் எழுந்து குளித்து, சாப்பிட்டுவிட்டு ஆர்வமாகப் பள்ளிக்குச் சென்றார்கள். சரியான நேரத்துக்கு உறங்குவார்கள். கொரோனா பரவலுக்குப் பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டதில் இருந்து பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்பி வைக்க போராடவேண்டியதாக உள்ளது. திடீரென்று ஜுரம், உடம்பு சரியில்லை என்று லீவு போட்டுவிடுகிறார்கள். எந்த நேரமும் செல்போனிலே இருக்கிறார்கள். சொல்கிற பேச்சை கேட்காமல் எதிர்த்து பேசுகிறார்கள். எதிர்காலத்து வாழ்க்கையை நினைத்து பார்ப்பதில்லை. பெற்றோர் ஆசிரியர்களுக்கு கொடுக்கும் மரியாதையும் பயமும் குறைந்துவிட்டதாக உணர்கிறேன்” என்று சொல்லி முடித்தார்.
வணங்காமுடி